திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்

By karthikeyan VFirst Published Jun 8, 2020, 8:35 PM IST
Highlights

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, அவர் சிகிச்சை பெற்றுவரும் ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, அவர் சிகிச்சை பெற்றுவரும் ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், கடந்த 2ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அவரது உடல்நிலை ஏற்கனவே மோசமடைந்து, பின்னர் தேறிய நிலையில், தற்போது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜெ.அன்பழகன் கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது. ஆரம்பத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் 90% ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் 2 நாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் 40%ஆக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை முதல் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது. அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அவரது இருதய செயல்பாடும் மோசமடைந்துள்ளது. ரத்த அழுத்தத்துக்காக மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன. மேலும், நாள்பட்ட சிறுநீரக நோயும் மோசமடைந்து வருகிறது. ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

click me!