சென்னையில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..!! களத்தில் இறங்கிய அமைச்சர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2020, 6:56 PM IST
Highlights

பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல்நலனை 14 நாட்களும் தொலைபேசி மூலம் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். 
 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தலைமையில், இன்று சென்னை ரிப்பன்  மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. உடன் மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தமிழ்நாடு ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களை நியமித்து உள்ளார்கள். 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு இந்திய மருத்துவ துறையின் மூலம் கபசுர குடிநீர் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தூய்மை பணியாளர்கள், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியாளர்கள், பூச்சி தடுப்பு துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் என மொத்தம் 38 ஆயிரத்து  198 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னை பள்ளி ஆசிரியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 நடமாடும் மாதிரி சேகரிப்பு மையங்கள் உட்பட 40 கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சோதனை மையங்கள் உள்ளன. இதனால் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 17 லட்சம் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வைரஸ் தொற்று பாதித்த பகுதிகள் நுண்கண்காணிப்பு  முறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான போதுமான அளவு நடமாடும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் உடல்நலனை 14 நாட்களும் தொலைபேசி மூலம் கண்காணித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். 

பெருநகர சென்னை மாநகராட்சி நகர சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் நோய் பாதிப்பு அதிகம் வர வாய்ப்புள்ளவர்களாக கணக்கிடப்பட்ட  3,47,380 நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சி ஹெல்ப் பேஜ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து முதியோர்களை பாதுகாக்க ஒவ்வொரு நாளும் ஒரு தன்னார்வலர் சராசரியாக 100 முதியோர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து தேவையானவற்றை அறிந்து உரிய தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றுக்கு 100 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இந்த முகாம்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி மருந்து கொரோனா (ஆர்சனிக் ஆல்பம் )வைரஸ் தொற்று தடுப்பதற்காக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2 லட்சம் நபர்களுக்கான ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு இந்திய மருத்துவ கழகம்  பரிந்துரையின் பேரில் ஹைட்ராக்ஸிக்கிளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன. குடிசைப் பகுதி மக்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி 98 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 1979 குடிசை பகுதிகளில் வாழும் சுமார் 30 லட்சம் மக்களுடைய உடல்நல விவரங்கள் கணக்கீடு செய்தல், எளிதில் பாதிப்புக்குள்ளாகும் மக்களை அடையாளம் காணுதல்ர covid-19 அறிகுறிகள் கண்டறிந்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படுகிறது. 

குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியாலான  தலா மூன்று முகக் கவசங்கள், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை வழங்குதல், வீடு வீடாக சென்று தொற்று பாதிப்பு குறித்து கணக்கெடுத்தால் வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!