நாங்குநேரி: பணம் வினியோகம் செய்த திமுக எம்.எல்.ஏ.வுக்கு கும்மாங்குத்து... சிறைப்பிடித்த மக்கள்... அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா!

By Asianet TamilFirst Published Oct 18, 2019, 6:53 AM IST
Highlights

இந்தப் பண வினியோகத்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் திமுகவினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் எம்.எல்.ஏ. சரவணக்குமார் உள்ளிட்டவர்களை இளைஞர்களும் பொதுமக்களும் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
 

நாங்குநேரியில் திமுக - அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. பணம் வினியோகித்ததாக திமுக எம்.எல்.ஏ.வை தாக்கி மக்கள் சிறைபிடித்தனர்.
 நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அக். 21 அன்று நடைபெற உள்ளது. தேர்தலில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.  நாங்குநேரியில் மூலைக்கரைப்பட்டி என்ற இடத்தில் பத்திரப்பதிவு  துறையில் பணியாற்றும் மாரியப்பன் என்பருடைய வீடு உள்ளது. இந்த வீட்டில் தங்கி பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ. சரவணக்குமார் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார்.


இந்நிலையில் இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த வீட்டுக்கு பொதுமக்கள் திரண்டனர். வீட்டில் இருந்தபடி எம்.எல்.ஏ. சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் பணம் வினியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பண வினியோகத்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் திமுகவினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் எம்.எல்.ஏ. சரவணக்குமார் உள்ளிட்டவர்களை இளைஞர்களும் பொதுமக்களும் சரமாரியாகத் தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் பிடிப்பட்ட நால்வரையும் அறைக்குள் தள்ளி கதவை பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அவர்களிடம் இருந்த பணம் சிதறி கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீஸாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பூட்டிய வீட்டுக்குள் இருந்த நால்வரையும் அழைத்துவந்தன. அவர்களிடம் ரூ.2.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸாரும் தேர்தல் அதிகாரிகளும் விசாரித்துவருகிறார்கள்.
இதேபோல் கட்டார்குளம் என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வினியோகம் செய்ததாகவும் தெரிகிறது. அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள் 3 அதிமுகவினரிடம் இருந்து ரூ.39 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் பத்மநேரி அருகே வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்துகொண்டிருந்தனர். அங்கே வந்த தேர்தல் அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பிவிட்டார்கள். அந்தப் பகுதியில் 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுபற்றியும் விசாரிக்கப்பட்டுவருகிறது.

click me!