
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக செயல்படுகின்றனர். இதனால், அரசு இயந்திரம் வேலை செய்யாமல் உள்ளது. கட்சியை வழி நடத்துவது யார் என தெரியாமல் அதிமுக தொண்டர்களும், அரசை நடத்துவது யார் என தெரியாமல் பொதுமக்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், இந்த குழப்பத்துக்கு முடிவு கட்டுவதற்காக கடந்த 7ம் தேதி எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சராக, கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை காட்ட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இன்று, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி இன்று காலை அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்தனர்.
அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அதிமுக சட்டம்ன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு கொண்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சியினர், 10 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது தொகுதிக்கு சென்று, மக்களை சந்தித்துவிட்டு வரட்டும். பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என கூறினர்.
இதனால், சட்டப்பேரவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அமளி, துமளி நிலவியது. எதிர் தரப்பில் உள்ள அனைத்து கட்சியினரும் கோஷமிட்டனர். இதை தட்டிக்கேட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏவை, தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
இதுபோன்ற சம்பவத்தை கண்ட சபாநாயகர் தனபால், கூட்டம் ஒத்தி வைப்பதா கூறினார். பின்னர், அவர் இருக்கையை விட்டு எழுந்து வெளியே சென்றார். அப்போது, அவரது கையை பிடித்து இழுந்த திமுக எம்எல்ஏக்கள் வில்லிவாக்கம் ரங்கநாதன், ஆயிரம் விளக்கு கு.க.செல்வம் ஆகியோர் ரகளையில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த சட்டமன்ற காவலர்கள், சபாநாயகர் தனபாலை மீட்டு வெளியே அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களின் ரகளை அதிகமாக காணப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் கு.க.செல்வம் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து, குசும்புக வேலைகளை செய்தனர்.
இந்த காட்சி அனைத்து டிவி சேனல்களிலும் ஒளிபரப்பானது. இதை பார்த்த பொதுமக்கள், கடும் அதிருப்தி அடைந்தனர்.