“சசிகலா என்ன சுதந்திர போராட்ட தியாகியா…?” - கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. காட்டம்

First Published Feb 18, 2017, 12:59 PM IST
Highlights


கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதல்வராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். பின்னர், கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சசிகலா முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து, போர்க்கொடி உயர்த்தினார். சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரண்டாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, தமிழக சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் எனவும், கர்நாடக சிறையில்,சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா? எப்படி இருக்கிறார்? என அதிமுகவினர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணராவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:-

பார்ப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு வந்தது முதல் சசிகலா அமைதியாகவே காணப்படுகிறார். இங்குள்ள மற்ற கைதிகளுக்கு வழங்கும் உணவையே அவருக்கும் வழங்குகிறோம். அனைவருக்கும் ஒரே நேரத்தில்தான் உணவுகள் வழங்கப்படுகிறது.

இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரும் குற்றம் செய்து வந்தவர்கள்தான். அவர்களுக்கு எந்த சிறப்பு சலுகையும் வழங்கவில்லை. தினமும் காலையில் புளியோதரை, உப்புமா, அவல் சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, , மதியம் கேழ்வரகு களி, சாப்பாடு, சப்பாத்தி, இரவு சப்பாத்தி, களி ஆகியவை வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒருநாள் ஆடு,கோழி இறைச்சி, தினமும் ஒரு வேளை டீ, காபி வழங்குகிறோம்.

இந்த சிறைச்சாலையில், ஏ, பி, சி என்று எந்த வகுப்பு அறைகளும் இல்லை. இங்குள்ளவர்கள் அனைவரும் குற்றம் செய்து வந்தவர்கள். யாருக்கு எந்த வித்தியாசமும் காட்டப்படுவது இல்லை. சசிகலாவுக்கு எந்த சிறப்பு அறையும் வழங்கப்படவில்லை. மற்ற கைதிகளை போலவே, அவரும் நடத்தப்படுகிறார்.

மற்ற கைதிகளை போலவே தரையில் படுத்து தூங்குகிறார். அவருக்கு இங்கு குளிர் அதிமாக இருப்பதால, கூடுதலாக 2 பெட்ஷீட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடாது என்பதால், ஒரு அறையில் 3 அல்லது 4 பேர் தங்க வைக்கப்படுகிறார்கள். ஆனால், சசிகலாவை பொறுத்தவரையில், அவர் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருடன் இளவரசி மட்டும் தங்கியுள்ளார்.

பார்ப்பன அக்ராஹர பெண்கள் சிறையில் 200க்கு குறைவான பெண் கைதிகளே உள்ளனர். பாதுகாப்புக்காக 3 பெண் சூப்பிரண்டுகள் இருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம்.

மற்ற கைதிகள் மூலம் சசிகலாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பது வீண் வதந்தி. இதெல்லாம் தேவையற்ற பயம். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதால், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்காக போராடி சிறைக்கு வரவில்லை. எல்லோருக்கும் வழங்கப்படுவதை போலவே, அவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

கைதி விரும்பினால் ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். அதற்கு நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட இரு மாநில அரசுகளும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

சசிகலா தேவைப்பட்டால் தன்னை எந்த சிறைக்கு வேண்டுமானாலும் மாற்றும்படி கோரலாம். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எந்த வேலையும் செய்யவில்லை. தேவைப்பட்டால் விரும்பும் வேலையை செய்யலாம். அதற்காக பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!