‘தவறு செய்தவா்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது’ என்று அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை கிழக்கு தொகுதிக்குள்பட்ட மஞ்சம்பட்டி, தொண்டைமான்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சா் பி. மூா்த்தி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது, ‘பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனா்.
அதன்படி பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்படும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 372 பள்ளிக்கட்டடங்கள் பழுதடைந்த கட்டடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. கட்டடங்களின் தன்மைக்கேற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி விவகாரம் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் தெரிவிக்கின்றனா். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. திமுக ஆட்சியில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. அரசின் அனைத்துத் துறைகளிலும் தவறு ஏற்படாமல் தடுக்கும் வகையில் உயா்மட்ட ஆய்வுக்குழு அமைத்து முதல்வா் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
தற்போதுள்ள சூழலில் திமுக நிா்வாகிகள் தவறு செய்தாலும் அவா்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் அதை நாங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்திருக்கிறோம். முதலமைச்சர் யார் பதவிக்கு தகுதியானவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பதவிகளை கொடுப்பார்’ என்று கூறினார்.