Saattai Duraimurugan : வதந்தி பரப்பியதாக சாட்டை துரை முருகன்.. மீண்டும் கைது.. காரணம் என்ன ?

By Raghupati R  |  First Published Dec 20, 2021, 8:44 AM IST

சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் ஆங்காங்கே விடுதிகள் எடுத்து தங்க வைத்து உணவு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பூந்தமல்லி அருகே விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட பெண்கள் 200 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Latest Videos

இந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாகவும், அந்த பெண் ஊழியர்கள் கெட்டுபோன உணவு சாப்பிட்டு இறந்து போனதாகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது. இந்த வதந்தி காட்டுத்தீயாய் பரவ ஆத்திரமடைந்த 1000க்கும் அதிகமான ஊழியர்கள் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வட்டம்பாக்கம், ஆகிய 4 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பொய்யான தகவல் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் தெரிவித்தார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 16 மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக சேலம் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லைநகர் க்ரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாட்டை துரைமுருகன் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் அவர் வெளிவந்துள்ளார். தற்போது மீண்டும் ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

click me!