எவ்வளவு வேணாலும் பணம் கொடுங்க.. அதிமுக ஜெயிக்கவே முடியாது.. அமைச்சர் கே.என்.நேரு அட்டாக் !!

By Raghupati R  |  First Published Feb 8, 2022, 6:40 AM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறும் என்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சி மற்றும் கருப்பூர், கன்னங்குறிச்சி, காடையாம்பட்டி, ஓமலூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் தி. மு. க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுகம் கூட்டம் சேலம் 5 ரோட்டில் உள்ள ஜெயக்குமார் ரத்னவேல் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மாவட்ட பொறுப்பாளர்கள் டி. எம். செல்வகணபதி (மேற்கு), எஸ். ஆர். சிவலிங்கம் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Latest Videos

இந்த கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘சேலம் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமார் 47 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 40 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை சார்பில் சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 52 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 528 கோடி நிதியை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். 

மேலும், சேலத்தில் நடந்த அரசு விழாவில் ரூ. 828 கோடியில் பல்வேறு பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் திமுகவில் ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். ஆனால் இங்கு ஒட்டுமொத்த அமைச்சராகவும், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பணி செய்து கொண்டிருக்கிறார். பிரசாரத்தின் போது உங்கள் பகுதியில் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்பதை கேட்டு மக்களிடம் ஓட்டு கேளுங்கள். 

அதை நாங்களும், மாவட்ட நிர்வாகமும் செய்து கொடுப்போம். சேலம் மாநகராட்சி தேர்தலில் அதிமுகவினர் பணத்தை கொண்டு வெற்றி பெறலாம் என கருதுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசும்போது, சேலம் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற பேசியுள்ளார். ஆனால் சேலம் மீண்டும் திமுகவின் கோட்டையாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சரிசமமாக நின்று போராடி வெற்றியை பெறுவது திமுகவுக்கு தெரியும். பணம் கொடுத்தால் ஓட்டுபோடுவார்கள் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் மக்கள் அனைவரும் மு. க. ஸ்டாலின் பின்னால் உள்ளார்கள். இதனால் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். சேலம் மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த மக்களை பார்த்தபோது வெற்றி நமது பக்கம் இருப்பதை அறிய முடிந்தது. திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர். தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி’ என்று பேசினார்.

click me!