
சட்டப்பேரவையில், திமுக தலைவர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை திமுகவினர் நீக்கக்கோரியதை துணை சபாநாயகர் மறுத்ததை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, இலங்கை வசம் இருந்த 357 படகுகள் அதிமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டது என்றார்.
தமிழக மீனவர்களுக்காக திமுக இதுவரை என்ன செய்துள்ளது என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தது திமுக ஆட்சியில்தான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
மீனவர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும், மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாகவும் திமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் கூறியிருந்தார்.
தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று திமுக தலைவர் கூறியதாக ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியின்போது ஒரு படகுகூட மீட்கப்படிடவில்லை என்று கூறினார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், மீனவர் விவகாரத்தில் திமுக பற்றி ஜெயக்குமார் கூறிய கருத்தை நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் அமளியில் ஈடுபட்டதால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இது குறித்து பேச திமுகவினர் வாய்ப்பு கேட்டனர். ஆனால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.