
சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் தமிழக காவலர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் உன்னத பணியில் உள்ள தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாத தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது. தங்களின் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் தமிழக காவலர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
பதவி உயர்விலும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதில்லை. இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேரும் பலர் தலைமைக் காவலராக ஓய்வு பெறும் அவலம் இப்போது நிலவுகிறது.
தமிழக காவலர்களின் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக காவலர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேர பணி நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது காவல்துறையில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை ஏழரைக் கோடியாக உயர்ந்துள்ளனர். காவலர்களின் எண்ணிக்கை 97,512 ஆக உள்ளது. அதாவது 770 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே இருக்கின்றனர். இது போதுமானதல்ல.
தற்போது தமிழக காவல்துறைக்கு 1.67 லட்சம் காவலர்கள் தேவை. மேலும் காவலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இவை குறித்த அறிவிப்புகளை காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது முதலமைச்சர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது