தேர்தல் ஜூரம்! நிர்வாகிகள் நியமனம்..! உதயநிதிக்கு என்ட் கார்டு போட்ட ஸ்டாலின்!

By Selva KathirFirst Published Aug 31, 2020, 12:33 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிக்குள் தேவையற்ற சலசலப்புகள் ஏற்படுவதை தவிர்க்க நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் உதயநிதியை, ஸ்டாலின் ஓரட்கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞர் அணிச்செயலாளர் பதவி ஏற்றது முதல் பம்பரமாக சுற்றி கட்சிப் பணியாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியில் பதவி கிடைத்த பிறகு அவர் செல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவிற்கு உதயநிதியின் செயல்பாடுகள் இருந்தன. அதிலும் செயல்படும் நிர்வாகிகள், செயல்படாத நிர்வாகிகள் என கணக்கெடுத்து கட்சியில் இளைஞர் அணிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச்சும் வகையில் உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வந்தார். உதயநிதிக்கு பொறுப்பு கிடைத்த பிறகு சமூக வலைதளங்கள் மட்டும் இன்றி களத்திலும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் தீவிரமாகின.


கட்சிக்கு உழைப்பவர்கள், திறமையானவர்களுக்கு திமுகவில் பதவி உண்டு என்பதை உதயநிதி உணர்த்தியதை தொடர்ந்து இளைஞர் அணியில் உறுப்பினர்கள்சேர்க்கை அதிகமானது. இப்படி இளைஞர் அணியில் உதயநிதியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக ஸ்டாலினிடம் மூத்த நிர்வாகிகள் பலர் புகழ்ந்து சொல்ல ஆரம்பித்தனர். இதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமானது. இளைஞர்அணியில் உதயநிதி கோலோச்சியது கட்சியில் யாருக்கும் பெரிய அளவில் நெருடல்களை ஏற்படவில்லை. ஆனால் திமுக நிர்வாகிகள் நியமனத்திலும் உதயநிதி தலையிட ஆரம்பித்த பிறகு தான் பிரச்சனை உருவாக ஆரம்பித்தது.

திமுகவின் மாவட்டச் செயலாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு இளைஞர் அணியில் இருந்து நிர்வாகிகளை உதயநிதி பரிந்துரைக்க அதனையே ஸ்டாலின் ஏற்று புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார். இது இளைஞர் அணியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் திமுகவில் சீனியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் அல்லாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளை உதயநிதி ஓரம்கட்டிவிட்டு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் பரிந்துரைகளை உதயநிதி செயல்படுத்த ஆரம்பித்ததும் பிரச்சனையை பெரிதாக்கியது.

இவற்றுக்கு எல்லாம் உச்சமாக சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நியமனத்தில் சீனியர்கள் கு.க. செல்வம், எம்.மோகன், தனசேகரன் போன்றோரை உதயநிதி ஓரம்கட்டியது கட்சியில் மற்ற சீனியர்களை யோசிக்க ஆரம்பித்தது- எம்எல்ஏ கு.க. செல்வம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்ததோடு உதயநிதிக்கு எதிராக அவர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்தார். இதே மனநிலையில் கட்சியின் பல்வேறு சீனியர் தலைவர்கள் இருப்பது மேலிடத்திற்கு தெரிய ஆரம்பித்தது. மாவட்டச் செயலாளர்கள் வேலையில் இளைஞர் அணியினர் குறுக்கிடுவது தேர்தலில் இளைஞர் அணியினருக்குத்தான் அதிக வாய்ப்பு என அவர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்தது கட்சியில் சீனியர் – ஜூனியர் என்கிற பிரிவினையை உருவாக்கியது.

மேலும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு தொகுதிகளுக்கு தற்போதே உதயநிதி வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டதாக வெளியான தகவல், அந்த பெரும்பாலோனார் உதயநிதியின் இளைஞர் அணியினர் என கசிந்த தகவல்கள் கட்சிக்கும் மேலும் சலசலப்பை அதிகப்படுத்தியது. இதனால் தங்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து திமுக நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளுக்கு நகர தயாராவதும் திமுக தலைமைக்கு தெரியவந்தது. இதனை அடுத்தே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவாலயத்தில் சீனியர் தலைவர்களை வரவழைத்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டிய நேரத்தில் திமுகவில் சீனியர் – ஜூனியர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே தேர்தல் முடியும் வரை நிர்வாகிகள் நியமனத்தை தானே நேரடியாக மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். இதன்படி கடந்த சில நாட்களாக கட்சியில் சத்தம் இல்லாமல் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற்று வருவதாகவும் உதயநிதியின் பரிந்துரையுடன் கட்சியில் குறுகிய காலத்தில் மேலே வந்தவர்களை குறி வைத்து களையெடுத்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

click me!