நாட்டை ஆள்பவர்கள் பாசிசவாதிகளாக இருந்தாலும், இந்தியா இன்னும் ஒரு மதச்சார்பற்ற நாடு தான்..!! எஸ்டிபிஐ அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2020, 11:44 AM IST
Highlights

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் நிதி சேகரிப்பதற்கான தற்போதைய மோடி அரசாங்கத்தின் நடவடிக்கை நெறிமுறையற்ற மற்றும் நாட்டின் மதச்சார்பின்மைக்கு முற்றிலும் எதிரான செயலாகும்.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைப் பயன்படுத்தி நிதி திரட்டுவது என்பது பாபரி மஸ்ஜிதின் சூறையாடப்பட்ட நிலத்தில் கோயில் கட்டுவது போலவே நெறிமுறையற்றது. எனவும் எஸ்டிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மோடி அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு சவால் விடுக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- 

“நாட்டை ஆள்பவர்கள் பாசிசவாதிகளாக இருந்தாலும், இந்தியா இன்னும் ஒரு மதச்சார்பற்ற நாடு தான். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், சுதந்திர இந்தியாவில் நடந்த இரண்டாவது பயங்கரவாத நடவடிக்கையாக பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது.‘ராமர் கோயிலை அழித்து மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது’ என்ற தன் சொந்த கண்டுபிடிப்புகளுக்கு மாறாக, பாபரி மஸ்ஜித் நிலம் உச்ச நீதிமன்றத்தால் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக சட்டவிரோதமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் நிதி சேகரிப்பதற்கான தற்போதைய மோடி அரசாங்கத்தின் நடவடிக்கை நெறிமுறையற்ற மற்றும் நாட்டின் மதச்சார்பின்மைக்கு முற்றிலும் எதிரான செயலாகும். 

இந்த விவகாரத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களின் மவுனம் பாஜக அரசின் மதச்சார்பின்மைக்கு எதிரான செயலை விட மிகவும் ஆபத்தானது. மோடி அரசாங்கத்தின் அனைத்து ஜனநாயக விரோத மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளையும் அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. இந்த மவுனம் பாஜக அரசாங்கத்தின் அனைத்து பாசிச நிகழ்ச்சி நிரல்களையும் எளிதில் செயல்படுத்த உதவுகிறது. மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவா ராஷ்டிரமாக நாட்டை மாற்றுவதற்கான ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை எதிர்க்கவும், அதனை தோற்கடிக்கவும் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட மக்கள் முன்வராவிட்டால், இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது கடந்த கால கதையாகவே இருக்கும்.

ஆகவே, ராமர் கோயில் கட்டுமானத்திற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவைப் பயன்படுத்தி நிதி திரட்டும் மோடி அரசின் திட்டத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குரல்களும், போராட்டங்களும் எழ வேண்டும்.” என்று அப்துல் மஜீத் வலியுறுத்தினார்.
என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!