அய்யோ ஆண்டவா கொரோனா கொடுமை முடிவதற்குள் இப்படி ஒரு கொடுமையா..!! பீதியில் மக்கள், அதிரடியில் சுகாதாரத்துறை.

By Ezhilarasan BabuFirst Published Aug 31, 2020, 10:54 AM IST
Highlights

இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக டெங்கு பாதிப்பு பரவலாக உருவாகி உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கியிருப்பது மக்களை பீதியடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதிலும் தமிழகம் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 4 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் காய்ச்சல், சளி அறிகுறி உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். காய்ச்சலால் பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக டெங்கு பாதிப்பு பரவலாக உருவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கும், டெங்கு காய்ச்சலுக்கும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால், அவர்களை அடையாளம் காண முடியாமல் இரண்டு பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி காய்ச்சலுடன் வரும் நோயாளியை முதலில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை கண்டறிவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் காய்ச்சல் முகாம்களில் கொரோனா, டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன. அதேபோல் டெங்கு கொசுக்கள் பரவாத வண்ணம் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளனர்.
 

click me!