
திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் முக ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோர் கருணாநிதிக்கு கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா இன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கருணாநிதியின் வைரவிழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கலந்து கொள்ள ஒவ்வொருவராக சென்னை வருகை புரிந்து வருகின்றனர்.
இதனிடையே திமுக தொண்டர்கள் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே நேற்று வைரவிழா குறித்த மலரை முக ஸ்டாலின் கருணாநிதியிடம் காண்பிப்பது போன்ற வீடியோ காட்சி வெளியானது.
இந்நிலையில் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருணாநிதியும் அவரது துணைவியாரும் இருக்கையில் அமர்ந்திருக்க மகள் செல்வி அவர்களுக்கு கேக் ஊட்டுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அவர்கள் அருகில் மருமகன் செல்வம், மகன் முக ஸ்டாலின், முக தமிழரசு ஆகியோர் உள்ளனர்.