தி.மு.க., நாடகமாடுகிறதா..? இரட்டை நிலைப்பாடு... ஆளுநர் சந்திப்பில் நிகழ்ந்தது என்ன..? குமுறும் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Nov 28, 2021, 3:20 PM IST
Highlights

தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு குறித்து இருவெவ்வேறு கருத்துக்கள் வெளியானது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவது தொடர்பாக பேசினோம்,” எனக் கூறினார்.
 
ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அறிவிப்பிலோ, சென்னையில் பெய்து வரும் மழை, வெள்ளம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாகக் கூறினார். இருதரப்பில் இருந்தும் வெவ்வேறு தகவல்கள் வந்ததால், இதில் எது உண்மை என்று பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர். மேலும், எதிர்கட்சியினரும் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆளுநர், முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன..? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில், ’’எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன? ‘ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்’ என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா?, என தெரிவித்துள்ளார்.

click me!