திமுக என்றால் தாய்மைக்கு எதிரான கட்சி... பெண்களை மதிக்க தெரியாத கட்சி... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Mar 28, 2021, 9:03 PM IST
Highlights

திமுக என்றால் தாய்மைக்கு எதிரான கட்சி என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார்.
 

சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா.அருளை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ஒரு விவசாயி என்பதே எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய தகுதியாகும். மு.க. ஸ்டாலினுக்கு சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, சுதந்திர தினம், குடியரசு தினம் என எதுவுமே தெரியாது. கணக்கும் தெரியாது. ஆனால், ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும். மீடியா மட்டும் இல்லாவிட்டால் ஸ்டாலின் மிகப்பெரிய ஜீரோ.
இந்தத் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல். சமூக நீதியின் அடிப்படையில்தான் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கிறோம். எனது வாழ்நாளில் 10 ஆண்டுகாலம் சேலம் மாவட்டத்தில்தான் நான் வாழ்ந்திருக்கிறேன். பாமகவின் கோரிக்கையான மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முதல் கட்டமாக தொடங்கியுள்ள முதலமைச்சர் இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளார். வன்னியர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு பெற்றது போல், பின்தங்கிய எல்லா சமுதாயத்துக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு பெறவேண்டும். அதற்காகவே அதிமுக கூட்டணியில் இணைந்தோம்.
திமுக தலைவர் ஓர் அரசியல் வியாபாரி. விவசாயிக்கும் ஓர் அரசியல் வியாபாரிக்கும் நடைபெறுகிற தேர்தல் இது. முதல்வரின் அரசியல் குறித்து தனிப்பட்ட முறையில் கருத்து கூறலாம். ஆனால், அவருடைய தாய் பற்றி அவதூறாக பேசிய ஆ.ராசாவை ஒரு போதும் மன்னிக்க முடியாது. திமுக என்றால் தாய்மைக்கு எதிரான கட்சி. பெண்மையையும், தாய்மையையும் மதிக்கத் தெரியாதவர்கள். ஆ.ராசா போன்று யாராவது ஒருவர் எங்கள் கட்சியில் பேசியிருந்தால் கட்சியிலிருந்து நீக்கியிருப்போம்.
திமுகவில் ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி போன்றோர் பெண்கள் குறித்து தவறாக பேசுகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். பெண்ணுரிமை பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசும் கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. ஆனால், இந்தக் கட்சிகள் முதல்வரின் தாயைப் பற்றி பேசிய ஆ.ராசா பற்றி வாய் திறக்காதது ஏன்? தமிழக தாய்மார்கள் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்துவிட்டார்கள்.” என்று அன்புமணி பேசினார். 
 

click me!