குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்... புதுச்சேரி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 28, 2021, 8:16 PM IST
Highlights

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  

கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குண்டுராவ், வீரப்பமொய்லி, புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ...

 

  • புதுச்சேரிக்கு முழுமையாக மாநில அந்தஸ்து.
  • புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் ரத்து.
  • புதுச்சேரியை 15வது நிதி கமிஷனில் சேர்க்க நடவடிக்கை.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர், மீனவர் உட்பட அனைத்து தரப்பு அனைத்து மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்.
  • மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • குடும்பத் தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும்.
  • மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு 60 GB டேட்டா மாதந்தோறும் வழங்கப்படும்.
  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மூடப்பட்ட ரேஷன்கடைகள் மீண்டும் திறக்கப்படும்.
  • அனைவருக்கும் மருத்துவ காப்பீடு செய்து தரப்படும்.
  • விவசாயம், சட்டம் மற்றும் மருத்துவக் கல்விக்கு தனித்தனியே பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
  • மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் 
  • இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் இறந்தால் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
  • மீன்வளத் துறையில் மீனவர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு செய்து தரப்படும்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 24000லிருந்து ரூபாய் 30000ஆக மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
  • நெல் கரும்பு போன்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக மானியத்தொகை ரூபாய் 25000 ஆயிரம் வழங்கப்படும்.
  • புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும், நகரப்பகுதியில் சாலையோரம் வசிக்கும் வீடற்ற நபர்களுக்குத் தங்கும் வசதி கட்டித் தரப்படும்.
  • பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் மூலம் கடன்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
  • ஆதிதிராவிடர் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
  • உடனடியாக உள்ளாட்சித்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
     
click me!