திமுக ஒரு பேரூராட்சி இயக்கம்.. ஒன்றிய அரசு என்ற உ.பிக்களை ஓங்கி அடித்த ராதாரவி.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 5:48 PM IST
Highlights

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகிறது, நான் சொல்கிறேன் திமுக ஒரு பேரூராட்சி இயக்கம், அவர்கள் எப்படி மத்திய அரசை ஒன்றிய அரசு என வேறு பெயரில் அழைக்கிறார்களோ அது போல நாங்களும் இனி திமுகவை பேரூராட்சி இயக்கம் என வேறு பெயரில் அழைப்போம். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற பாஜக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 80 எம்எல்ஏக்களை கைப்பற்றும் என்றும், ஆட்சியை பிடிக்கா விட்டாலும் பாஜக இல்லாமல் எவராலும் ஆள முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

தன்னைப் பொறுத்த வரையில் திமுக என்பது பேரூராட்சி இயக்கம் என்றும் ராதாரவி விமர்சித்துள்ளார். மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக கூறி வரும் நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தது முதலே பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் மோதல் இருந்து வருகிறது. தற்போது  திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாஜகவின் எதிர்ப்பும், விமர்சனமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அதிமுகவை காட்டிலும் பாஜக மிகத் தீவிரமாக எதிர்த்து வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்,  பயன்பாட்டில் இல்லாத கோவில் நகைகள் உருக்கி வங்கியில் முதலீடு செய்யும் திட்டம், தமிழில் அர்ச்சனை, நீட் தேர்வு விலக்கு மசோதா என அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், விமர்சித்து வருகிறது.

தொடர்ந்து இந்துக்களுக்கும், இந்து மக்களின் மத உணர்வுக்கும் எதிராக திமுக செயல்பட்டு வருகிறது என்றும், இந்து அறநிலைத்துறை என்ற போர்வையில் கோவில்களை திமுக கபளீகரம் செய்து வருகிறது என்றும், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசுடன் சுமுகமாக இருப்பதே மாநிலத்திற்கு உகந்தது என்றும், மத்திய அரசுடனான உறவு நல்ல முறையில் இருந்தால் மட்டுமே தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் தடையின்றி பெற முடியும் என்ற கருத்து இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலையின்றி தமிழக மக்கள் நலன் சார்ந்த மத்திய பாஜக அரசு திமுக அரசு எதிர்த்து வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து மத்திய அரசு எதேச்சதிகாரத்துடன் நடந்து வருகிறது என்றும், நீட்தேர்வு, வேளாண் சட்டங்கள், மக்களின் எதிர்ப்பையும் மீறி மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டங்கள் என்றும் மத்திய அரசுக்கு எதிராக திமுக குரல் கொடுத்து வருகிறது. 

மாநில அரசுகளுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வரும் தமிழக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்றும், பல ஒன்றியங்களின் கூட்டு அமைப்பு தான் மத்திய அரசு என்றும் கூறிவருகிறது. தமிழக அரசின் இந்த சொல்லாடல் பாஜகவினர், இந்துத்துவவாதிகளை கொந்தளிப்பு அடைய வைத்துள்ளது.   அதாவது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு,  ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற முழக்கங்களுக்கு எதிராகத்தான் தமிழக அரசு ஒன்றிய அரசு என்ற சொல்லாடலை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் சிறப்பு தன்மை இருக்கிறது, ஆனால் அது எதையும்  மதிக்காமல் அனைத்து அதிகாரங்களையும் தன்வயப்படுத்தி அதிகாரமையமாக மாற மத்தியஅரசு துடிக்கிறது என்ற விமர்சனத்தையும் திமுக மற்றும்  அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் முன்வைத்து வருகின்றன.

ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் தமிழக அரசுகளின் செய்தி குறிப்பு மற்றும் ஆவணங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் இந்த வார்த்தையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த சொல்லாடலை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில்  திமுகவின் இந்த சொல்லாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக என்பது பேரூராட்சி இயக்கம் என பாஜகவை சேர்ந்த நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குப்பத்தில் பிஜேபி சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொங்கல் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக துணைத் தலைவர் வி.பி துரைசாமி, நடிகர் ராதாரவி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய ராதாரவி தமிழக பாஜக தற்போது 4 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. அடுத்து வரும் தேர்தலில் 80  எம்எல்ஏக்கள் கைப்பற்றும். பாஜக ஆட்சியை பிடிக்காது என்றாலும் பாஜக இல்லாமல் யாராலும் ஆள முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்.

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகிறது, நான் சொல்கிறேன் திமுக ஒரு பேரூராட்சி இயக்கம், அவர்கள் எப்படி மத்திய அரசை ஒன்றிய அரசு என வேறு பெயரில் அழைக்கிறார்களோ அது போல நாங்களும் இனி திமுகவை பேரூராட்சி இயக்கம் என வேறு பெயரில் அழைப்போம். ஒரு செங்கலை காட்டி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்றார்கள், தற்போது தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்துள்ளார். இதுவரை பிரதமர் மோடி மீது ஏதாவது ஒரு ஊழல் குற்றச்சாட்டை யாராலும் சொல்ல முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். 
 

click me!