சூரப்புலி... கருவாட்டுக் கடை எலி... எடப்பாடியார் மீது மானாவாரியாக அனலை கக்கிய மு.க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Dec 12, 2020, 9:02 PM IST
Highlights

இன்று நிருபர்கள் முன்னால் சூரப்புலியைப் போல கர்ஜிக்கும் பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் போய் கருவாட்டுக்கடை எலியைப் போலப் பதுங்கியது ஏன்  என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சரமாரியாகத் தாக்கி பேசினார்.
 

ராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம் - 2021’ சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூத்தில் காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார். “ இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் அல்ல. மறுபடியும் தனக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான் இருக்கும் சில மாதங்களிலும் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடும் மனநிலையில் மளமளவென்று ஊழல் செய்து குவித்துக் கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி சொல்லி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி என்பது என்ன? நான்காண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம்! இதுதான் ஜெயலலிதா ஆட்சி!


தினமும் ஊர் ஊராகப் போய் அரசாங்க விழாக்களில் கலந்து கொண்டு அரசியல் பேசி வருகிறார் பழனிசாமி. அவருக்கு அரசுக்கும் கட்சிக்குமே வித்தியாசம் தெரியவில்லை! தன்னை ஏதோ மகா யோக்கியரைப் போல எடப்பாடி பழனிசாமி காட்டிக் கொண்டு வருகிறார். நான் ஒரு விவசாயி, எனக்கு விவசாயத்தைத் தவிர வேறு வருமானம் கிடையாது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார் பழனிசாமி. இதனை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள் என்பது வேறு விஷயம். அதிமுகவினரே இதைக் கேட்டால் சிரிப்பார்கள். கொள்ளையடிப்பது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்குத் தகுதி வாய்ந்த ஒரு ஆள் எடப்பாடி பழனிசாமிதான். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஊழல் அரசாங்கம் எது என்று கேட்டால், அது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம்தான்!
இவர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுவிட்டது. அது முறையாக நடந்திருந்தால் பழனிசாமி, இப்போது தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மத்திய சிறையில் இருந்திருப்பார். உச்ச நீதிமன்றத்துக்குப் போய் தடை வாங்கினார் பழனிசாமி. அதனால் இப்போது வெளியில் நடமாடிக் கொண்டு இருக்கிறார். சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள், பினாமிகளுக்கு கொடுத்தவர் பழனிசாமி. “பொது ஊழியர் என்ற முறையில் முதலமைச்சர் பழனிசாமி மீதும், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு தான் உயர்நீதிமன்றத்துக்கு போனோம்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். ஒரு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் அரசு தரப்பு நீதிமன்றத்துக்கு ஏன் தரவில்லை என்று நீதிபதி கேட்டாரா இல்லையா? எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றும் நோக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பு என்று நீதிபதி கண்டித்தாரா இல்லையா? 7 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடிக்கு டெண்டர்கள் இப்படி விடப்பட்டுள்ளது என்று நீதிபதி சொன்னாரா இல்லையா? தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நேர்மையாக நடந்து கொள்ளாது என்று சொல்லி சி.பி.ஐ.க்கு ஆவணங்களை நீதிபதி ஒப்படைக்கச் சொன்னாரா இல்லையா? இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கிறாரா? அப்போது டெல்லி சென்ற பழனிசாமியிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டபோது என்ன சொன்னார்? நான் தவறு செய்யவில்லை, உறவினர்களுக்கு டெண்டர் தரவில்லை என்று சொல்லவில்லை. மாறாக, 'யார் மீது தான் லஞ்சப் புகார் இல்லை' என்று நிருபர்களிடம் கேட்ட யோக்கியவான்தான் இந்த பழனிசாமி!
பழனிசாமி மீதான டெண்டர் வழக்கை விசாரித்து மூன்றே மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று மாதத்தில் பதவி போய்விடுமே என்பதற்காக உடனே உச்ச நீதிமன்றம் போய் தடை ஆணை வாங்கியவர்தான் இந்த பழனிசாமி. இன்று நிருபர்கள் முன்னால் சூரப்புலியைப் போல கர்ஜிக்கும் பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் போய் கருவாட்டுக்கடை எலியைப் போலப் பதுங்கியது ஏன்? 'எந்த விசாரணைக்கும் நான் தயார்' என்று ஏன் சொல்லவில்லை? எந்தத் தவறும் நடக்கவில்லை என்பதை நிரூபித்துவிட்டு மீண்டும் முதலமைச்சர் ஆவேன் என்று ஏன் அவரால் சொல்ல முடியவில்லை? அவரால் சொல்ல முடியாது! ஏனென்றால் தனது உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்து பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி அவர்! அவர் எடப்பாடி பழனிசாமி அல்ல, டெண்டர் பழனிசாமி!
இந்த ஆட்சியில் பல்வேறு டெண்டர்களை எடுத்து நடத்தி வரும் சுப்பிரமணியம், இராமலிங்கம் ஆகியோர் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்வாரா? அவர்களது குடும்பத்துக்கும் பழனிசாமி குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை பழனிசாமி பகிரங்கமாகச் சொல்லத் தயாரா? 
அ.தி.மு.கவை பா.ஜ.கவுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது? அண்ணா சொன்னது அவர் காலத்தோடு முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி கொடுத்த பிறகும் உங்கள் கட்சிக்கு எதற்கு அண்ணா பெயர்? எதற்காக கொடியில் அண்ணா படம்? ஒரு கொள்ளைக் கும்பல், அ.தி.மு.க.வை வளைத்துக் கொண்டு விட்டது. தங்களது தலையைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டது என்பதை உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் உணர்ந்தாக வேண்டும். அ.தி.மு.கவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு அவமானச் சின்னம் யார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவரது ஊழலைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அதற்குப் பதில் சொல்ல திராணி இல்லாத பழனிசாமி, 2ஜியைப் பற்றி பேசுகிறார்.
இந்த அதிமுக காலத்தில்தான் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் வருமான வரிச் சோதனை நடந்தது. இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் தலைமைச் செயலாளரே சிக்கினார். டி.ஜி.பி.யே சிக்கினார். அ.தி.மு.க கேபினெட்டில் இருந்த அனைவரும் சிக்கினார்கள் என்பதுதான் வரலாற்றில் பொறிக்கப்படும். இவை எல்லாம் பழனிசாமிக்கு வேண்டுமானால் அவமானமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்கு களங்கம்; அவமானம். இந்த அவமானத்தை களங்கத்தைத் துடைக்கும் தேர்தல்தான் வருகிற சட்டமன்றத் தேர்தல். தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட அவமானம் துடைப்போம்! தமிழகம் தலைநிமிர தி.மு.க. ஆட்சியை அமைப்போம்!” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!