தமிழக கோவில்களின் பண்பாடு, மற்றும் மரபை சிதைக்கும் முயற்சியில், திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக கோவில்களின் பண்பாடு, மற்றும் மரபை சிதைக்கும் முயற்சியில், திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளிலும் மரபுகளிலும் குறுக்கீடு செய்து, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆகம விதிகளை எல்லாம், மதிக்காமல் நடப்பதை திறனற்ற திமுக அரசு அரசு தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. புகழ்மிக்க திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக, கோபுரத்தில் இருந்த இறைவனின் திருமேனியான சிற்பம் உடைக்கப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையற்ற, நாத்திகர்களின் கையிலே, இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்கப்பட்டிருப்பதால், கோவிலில் உள்ள, இறைவனின் திருமேனியான சிலையின் முகத்தின் மீது ஆணி வைத்து அடித்து துளையிட்டு, முகத்தை சேதப்படுத்தி, அங்கே சிசிடிவி பொருத்தப்படுகிறது. இதை, சமநிலைச் சிந்தனை உள்ள எந்த மனிதனும் செய்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பான்மைத் தமிழர்களை அவமானப்படுத்தினால், சிறுபான்மையினர் மகிழ்ச்சியடைவார்கள் என்ற சிந்தனையில், தமிழ் மக்களின் இறை நம்பிக்கையோடு, விளையாடுவதற்காகவே, வேண்டுமென்றே, திமுக அரசால் திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும். இந்த இழப்பிற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? விலைமதிப்பற்ற சிலைகளை கமிஷன்களுக்காக களவு போக அனுமதிப்பது யார்? இறைவனின் திருமேனிகளை அலங்கரிக்கும் தமிழகத் திருக்கோவில்களின் பாரம்பரியமிக்க பொன் நகைகளை எல்லாம் அதன் மதிப்பை அறியாது உருக்கி, தங்க கட்டியாக்கி அதிலும் ஊழலுக்கு வழி வகுப்பது யார்?
இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக மக்கள் கோபத்தில் கொந்தளித்து வயிறு எரிகின்றனர்.. ஸ்டாலினுக்கு சவால் விடும் இபிஎஸ்.!
அனைத்து வகையிலும் இந்து சமய அறநிலையத்துறையில் தொடர் ஊழல் மற்றும் களவு நடைபெற்று வருகிறது. தமிழக மக்களின் இறை நம்பிக்கையை தொடர்ந்து உதாசீனப்படுத்தும் திமுகவினரை தமிழக மக்களும் அந்த ஆண்டவனும்கூட மன்னிக்கவே மாட்டார்கள். அர்ச்சகர்களின் பயிற்சி காலத்தை ஐந்தாண்டிலிருந்து ஒரு ஆண்டாக குறைக்க அரசு நடவடிக்கை எடுப்பதன் நோக்கம் கண்டனத்துக்குரியது. திமுக அரசுக்கு எந்தெந்த விஷயங்கள் தலையீடு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இல்லை. இந்து சமய அறநிலையத்துறையை நிர்வாகம் செய்யும் தமிழக அரசுக்கு ஆன்மீகத்தின் மீதும் இறைதன்மை மீதும் நம்பிக்கை இல்லாதிருக்கும் போது, மரபுகளை சிதைக்காமல் நம்பிக்கைகளை கலைக்காமல், ஆகமங்களை மீறாமல், இருக்க வேண்டிய கட்டாயமும் கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால் தொடர்ந்து தனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் தலையிட்டு மரபுகளை சிதைப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் தமிழக அரசு, அர்ச்சகர்களின் பயிற்சி காலத்தை ஐந்தாண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைத்து அமைக்கும் முடிவினை தடாலடியாக எடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள தொன்மையான ஆதீனங்கள் பலரும் இதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து இருக்கிறார்கள். யாருடனும் கலந்து ஆலோசிக்காமல், தமிழக அரசு, இப்படி திடீர் முடிவுகளை எடுப்பது, மக்களின் நம்பிக்கையோடு விளையாடி, பாரம்பரியத்தை அவமதிக்கும் செயலாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். பன்னிரு திருமுறைகளையும் படித்து முடிக்கவே ஐந்து ஆண்டுகள் போதாத நிலையில், ஒரே ஆண்டில் பயிற்சி முடிப்பது, என்பது மரபுகளை அறிந்துகொள்ள பழகிக்கொள்ள போதுமானதில்லை.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை இல்லையா..? தமிழக அரசை விளாசும் ராமதாஸ்
எப்படி மருத்துவருக்கான படிப்பை ஒராண்டாகச் சுருக்க முடியாதோ!... அது போல ஆகம அர்ச்சகர் பணியையும், ஓராண்டில் சுருக்க முடியாது, தமிழகத்தின் ஆதீனங்கள், மடாலயங்கள், ஆன்மீக வழிபாடுகள் இவைகளின் உள்மரபுகளில் தலையிடுவதை தமிழகஅரசு கைவிட வேண்டும். திமுக அரசு பதவி ஏற்றது முதல் ஆதீன மடாலய விஷயங்களில், ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டாக்கி வளர்த்து வருகிறது, இத்தகைய போக்கு ஏற்புடையது அல்ல. தமிழ் தொண்டு செய்து வரும் ஆதீன மடலாயங்களின் மரபு வழி உள்விவகாரங்களில் தலையிடுவதை தமிழக அரசு நிறுத்தாவிட்டால் அதற்கான பின் விளைவுகளை மக்களின் எதிர்ப்பு மூலம் பதிவு செய்யப்படும். தமிழக கோவில்களின் பண்பாடு, மற்றும் மரபை சிதைக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுகிறது. பயிற்சியின் காலத்தை குறைப்பதால், குடமுழுக்கு மற்றும் பூஜை செய்யும் முறைகளில் குளறுபடிகள் ஏற்படும். திறனற்ற திமுக அரசு தொடர்ந்து தமிழர் மரபுகளில் தலையிடுவது... பொதுமக்களுக்கு அச்சத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, கோவில் சிலைகள் உடைப்பு, அர்ச்சர்களின் பயிற்சி கால குறைப்பு, மரபுகளுக்குள்ளும், ஆன்மீக மடங்களுக்குள்ளும் திமுக அரசின் கொள்கை திணிப்பு என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. ஆன்மீக, மடாலய விஷயங்களில் அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.