
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, திமுக கொறடா சக்கரபாணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அண்மையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்வருக்கு எதிரான வகையில் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டு, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போதே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வெளியில் சென்ற அதிமுக., உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப் பட்டது. இதனை தினகரன் தரப்பினரும், திமுக.,வினரும் வெளிப்படையாகப் பேசினர். இதனால், டிடிவி தினகரனின் செயல்பாட்டில் திமுக.,வினர் பின்னணியில் உள்ளனர் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதனை திமுக.,வினர் மறுத்தனர்.
இதனிடையே, தாங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அது விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறி, திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.