அதிமுக அரசு மீது புத்தம் புதிய ஊழல் குற்றச்சாட்டு... மோப்பம் பிடித்து திமுக கிளப்பும் பகீர் புகார்!

By Asianet TamilFirst Published Dec 21, 2019, 10:20 PM IST
Highlights

அந்த வரிசையில் இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற இருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியிருக்கிறது. இந்தப் பணிக்கு டெண்டர் விடும் பணிகள் டிசம்பர் 11 அன்று ஐ.டி. துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 2 நிறுவனங்கள் பங்கேற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதற்காக அரசின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி தரும்படி அந்நிறுவனங்கள் கேட்டுள்ளன.
 

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ரூ. 2000 கோடிக்கான ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டத்தில் 14 சதவீதம் பேரம் பேசப்பட்டு உள்ளதாக அதிமுக ஆட்சியின் மீது திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பாகக் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


சென்னையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மீது புதிதாக ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை அவர் முன்வைத்தார். “எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் 3,000 கோடி ரூபாய் ஊழல்,  காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்; சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை என பல துறைகளிலும் ஊழல் நடைபெற்றுவருகிறது. 
அந்த வரிசையில் இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற இருக்கிறது. ஐ.டி. துறையில் தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகியிருக்கிறது. இந்தப் பணிக்கு டெண்டர் விடும் பணிகள் டிசம்பர் 11 அன்று ஐ.டி. துறை வெளியிட்டுள்ளது. இந்த டெண்டரில் 2 நிறுவனங்கள் பங்கேற்க அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. இதற்காக அரசின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி தரும்படி அந்நிறுவனங்கள் கேட்டுள்ளன. விதிகளில் புதிதாக 6 நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால் டெண்டரை ரத்து செய்து விட்டு புதிய டெண்டர் விடும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடான 2,000 கோடி ரூபாயில் 14 சதவீதம் பேரம் பேசப்பட்டு உள்ளது.” என்று தங்கம் தென்னரசு குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக அமைகப்பட்டுள்ள குழு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு, “அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தவறு. அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. அதற்கு மாநில அரசு துணை போய்கொண்டிருக்கிறது. ஒரு வேளை அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கைப்பற்றினால், தமிழக மாணவர்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு உரிமை பறிபோய்விடும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

click me!