
தேமுதிகவை வம்பிற்கு இழுத்ததால் தான் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
வேலூர் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவருக்கு நெருக்கமான ஒருவரின் சிமெண்ட் குடோனில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக மூட்டைகளிலும், பெட்டிகளிலும் சுமார் 10 கோடிகளுக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப்பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. துரைமுருகன் வீடு மட்டுமல்லாது, அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்க்ஸ் பொறியியல் கல்லூரி, துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது, ’’தேமுதிகவை அவமானப்படுத்த நினைத்த திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது வருமானவரித்துறை சோதனையால் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார். தேமுதிகவை சீண்ட நினைத்து தற்போது தோல்வி அடைந்து இருக்கிறார் துரைமுருகன். அவர் பேசியதன் பலன் இது.
தேமுதிக எவ்வளவு வலிமையான கட்சி என்று இப்போது தெரிந்து இருக்கும். தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. துரைமுருகன் மட்டுமல்ல திமுகவினரும் இனியாவது எங்களின் பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க பார்க்கிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்காது. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். திமுக வேட்பாளர்கள் அனைவரது வீடுகளிலும் வருமானவரிதுறை சோதனை நடத்த வேண்டும்’’ என அவர் பேசினார்.
முன்னதாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே சில தேமுதிக நிர்வாகிகள் கூட்டணிக்காக தனது வீட்டிற்கு வந்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பின்னர், கூட்டணி முடிந்து விட்டதால் திருப்பி அனுப்பி விட்டதாகவும் துரைமுருகன் மீடியாக்களிடம் உண்மையை போட்டுடைத்தார். இதனை மனதில் வைத்தே பிரேமலதா, துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தற்போது விமர்சித்து வருகிறார்.