’எடுபிடி- ஏஜெண்ட்...’ பழசை கிளறி அதிமுக- பாமக- பாஜக கூட்டணியை பதறவைத்த டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2019, 11:26 AM IST
Highlights

ஜெயலலிதா கொங்கு மண்டலத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால் சசிகலா முதல்வர் பதவியையே விட்டுக்கொடுத்தார் என அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அதகளப்படுத்தியுள்ளார்.
 

ஜெயலலிதா கொங்கு மண்டலத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிக்கொடுத்தார். ஆனால் சசிகலா முதல்வர் பதவியையே விட்டுக்கொடுத்தார் என அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அதகளப்படுத்தியுள்ளார்.

ஈரோடு தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ’’"மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடி இந்த இருவர் ஆட்சியால் கடந்த இரு ஆண்டுகளாக மக்களுக்கு துன்பங்கள் கூடிவிட்டது.. மத்திய- மாநில கொடுங்கோல் ஆட்சிகளை முடிவுக்குக் கொண்டு வர நல்லதொரு வாய்ப்புதான், மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி இடைத்தேர்தலும். 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், இந்த எடப்பாடி பழனிசாமி  அரசு கவிழ்ந்து விடும்.
 
நான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவன், விவசாயி, என செல்லுகிற இடமெல்லாம் சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. போராடிய விவசாயிகள் மீது அடக்குமுறையைக் கையாளுகின்றனர். மத்திய பாஜக அரசின் செல்வாக்கினால் நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் கொண்டு வந்து காவிரிப்படுகை விவசாயிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

மேற்கு மண்டலத்தில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதாகக் கூறி நிலங்களைப் பாழ்படுத்தி வருகின்றனர். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்கிறார்கள். மத்திய அரசின் கைக்கூலியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 

அதிமுகவிற்கு எப்போதும் ஆதரவு தரும் பகுதியாக மேற்கு மண்டலப்பகுதி விளங்கியதால், ஜெயலலிதா அதிக அமைச்சர் பதவிகளை இங்கு வழங்கினார். ஏன்? கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா முதல்வர் பதவியையே கொடுத்தார். ஆனால், ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், சசிகலாவிற்கும், தமிழக மக்களுக்கும் இந்த ஆட்சியாளர்கள் துரோகம் செய்து செய்து விட்டனர்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்பும் அவர் ஒரு குற்றவாளி என்றும், அவர் உயிரோடு இருந்தால் சிறைக்குச் சென்று இருப்பார் என்று பா.ம.க. ராமதாஸ் கூறினார். அது மட்டுமா? ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் வைக்கக் கூடாது என்று தடுத்ததோடு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் சென்றவர்களுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவிற்கு அவர் துரோகம் செய்துள்ளார்.

 
 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடியா, லேடியா எனக்கேட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். ஆனால், இன்று மோடியின் காலைப்பிடித்துக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். மத்தியில் உள்ளவர்களுக்கு இவர்கள் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இங்கு இருந்த ஜமீன்தார்கள் எல்லாம் எடுபிடிகளாக இருந்ததுபோல, இப்போது அதுபோல தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இந்த துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

கொங்கு மண்டலத்திற்கு முதல்வர் பதவி கொடுத்து நாங்கள் பெருமை சேர்த்தோம். ஆனால், அந்த முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தின் ஜீவாதாரமான விவசாயம், பின்னலாடை, நெசவுத்தொழில்கள் அழிந்து வருகிறார்" என அவர் தெரிவித்தார்.

 

click me!