மக்கள் நலன் காக்கும் இயக்கம் திமுக..உயிர் துறந்து நிரூபித்தவர் ஜெ.அன்பழகன்.. மா.செ. கூட்டத்தில் வீரவணக்கம்!

By Asianet TamilFirst Published Jun 14, 2020, 9:06 PM IST
Highlights

 திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசி மூச்சுவரை திமுகவை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.
 

திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகனுக்கு வீரவணக்கம் செலுத்தி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் இன்று நடைபெற்றது. கட்சி தலைவர் மு.கஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் வருமாறு:
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திலும் தன் உடல்நிலையைவிட மக்களின் பசிப்பிணி நீக்குவதே முதன்மையானது என்கிற சீரிய பொதுநல சிந்தனையுடன், என்றென்றும் தலைமையின் வழிகாட்டுதலை சிறிதும் வழுவாமல் நிறைவேற்றுபவராகக் களப்பணியாற்றி, உடல்நலன் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி மறைவெய்தி, திமுகவினர் அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்டுள்ளார்.


கருணாநிதியின் சென்னை மாவட்ட தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கி, மிசா சிறைவாச சித்திரவதைகளை மு.க.ஸ்டாலினுடன் ஏற்றுக்கொண்டு திமுகவைக் கட்டிக்காப்பதில் உறுதியாக விளங்கிய தனது தந்தை 'பழக்கடை' ஜெயராமனின் அடியொற்றி, ஜெ.அன்பழகனும் இளம் வயது முதலே கட்சிப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கருணாநிதியைத் தனது தந்தையின் இடத்தில் வைத்துப் போற்றியவர் அன்பழகன். தியாகராயர் நகர் பகுதியிலும், ஒருங்கிணைந்த தென்சென்னை மாவட்டத்திலும், பிறகு சென்னை மேற்கு மாவட்டத்திலும் திமுகவுக்குச் சிறப்பாக வலுவூட்டியவர் அன்பழகன்.
மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த காலம்தொட்டே அவரது நம்பிக்கை மிகுந்த உடன்பிறப்பாக, கொள்கைத் தோழனாக, இயக்கத்தின் லட்சிய சகோதரன் என்கிற உணர்வுடன் நெருங்கிப் பழகி, உரிமையுடன் கருத்துகளை எடுத்துரைக்கக்கூடியவர் ஜெ.அன்பழகன். 2001, 2011, 2016 என 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி உறுப்பினராக பேரவையில் மக்கள் நலன் குறித்து முழங்கினார். தலைவர் கருணாநிதி குறித்து ஆளுங்கட்சியினர் அவதூறாகப் பேச முனைந்த போதெல்லாம், நொடிகூட தாமதிக்காமல் எழுந்து நின்று, எரிமலையாய்க் குமுறி எதிர்ப்பினைப் பதிவு செய்தார்.
தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் உள்பட தனது மாவட்டத்திற்குட்பட்ட நிகழ்வுகளை மிக பிரம்மாண்டமான முறையில், எழிலையும் எழுச்சியையும் கூட்டி, நடத்திக்காட்டி அனைத்து உடன்பிறப்புகளின் உள்ளங்களிலும் உயர்வான இடத்தைப் பிடித்தவர் அன்பழகன். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவையும், அதனையொட்டி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தையும், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் வியந்து போற்றிடும் வண்ணம் நடத்திக் காட்டினார் அன்பழகன். திமுக ரத்தம் பாய்ந்த கட்டுடல், கருணாநிதி ஒருவரே தலைவர் என்ற கடமை உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் கட்டுப்பாடு, மக்கள் மன்றத்திலும் சட்டப்பேரவையிலும் சளைக்காமல் போராடும் கனிவு கலந்த துணிவு, மனதில் பட்டதை ஒளிக்காமல் எடுத்துரைக்கும் மாண்பு என கண்ணியமும் உண்மையும் மிக்க உடன்பிறப்பாக கடைசி மூச்சுவரை திமுகவை முன்னிறுத்திச் செயல்பட்டவர் ஜெ.அன்பழகன்.
திமுக தலைமையின் கட்டளையை நிறைவேற்றும் உடன்பிறப்பாக, மக்கள் நலனில் மாறாத அக்கறை கொண்டு செயலாற்றும் பொதுநலவாதியாக, தன் உயிரைவிட பட்டினிச்சாவினால் உயிரிழப்புகள் ஏற்படாதபடி காப்பதே முதன்மையானது என்கிற லட்சிய உறுதியுடன் சளைக்காமல் களப்பணியாற்றி, திமுக என்றென்றும் மக்கள் நலன் காத்திடும் இயக்கம் என்பதை, தன்னுடைய உயிரை ஈந்து தமிழ் மண்ணுக்கு நிரூபித்துள்ள தியாகச்சுடர் ஜெ.அன்பழகனுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் என்ற உறுதியுடன், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இரங்கல் தீர்மானத்தோடு தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி, முன்னாள் மேலவை உறுப்பினர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.அம்பலவாணன்,  மறைந்த  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மகள் மணமல்லி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

click me!