நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 26, 2022, 9:07 PM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், நாளை காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், நாளை காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். மேலும் மேயர் உள்ளிட்ட 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுவதாகவும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அதாவது 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் 28 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வேட்புமனுகள் மீதான பரிசீலனை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடை நாளாகும்.

வெற்றி பெற்றவர்கள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி பதவியேற்பார்கள் என அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், மறைமுக தேர்தல் 04.03.2022 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து  திமுகவின்  முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வழியாக நடைபெறும். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!