தனியாருக்கு மோடி விற்றால் கூப்பாடு... பேருந்துகளை ஸ்டாலின் விற்கலாமா.? பொளந்துகட்டும் கிருஷ்ணசாமி!

By Asianet TamilFirst Published Jul 10, 2022, 11:01 PM IST
Highlights

 இந்தியாவையே விற்பதாகக் கூக்குரல் எழுப்பினார்கள். ஆனால், இன்று ஸ்டாலின் அரசு ஏழை, எளிய தமிழக மக்களின் பயணங்களுக்கு பெரும்பங்காற்றும் அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமமாகாதா என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய அரசின் தனியார் மயமாக்குதலைக் கடுமையாக எதிர்த்து, அரசியல் செய்து வந்த திமுக இன்று ஆட்சிக்கு வந்தபிறகு, அரசுத் துறைகளை அசுர வேகத்தில் தனியார் மயமாக்கத் துடிக்கிறது. ஆட்சியில் இல்லாதபோது முற்போக்கு,  பொதுவுடமைவாதிகள் போல முழங்கிவிட்டு இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகளைத் திறந்து விடும் முயற்சியில் திமுக அரசு களம் இறங்கி இருக்கிறது. சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் பேருந்துகளே லட்சக்கணக்கான மக்களின் பயணத்திற்கு உறுதுணையாக விளங்குகின்றன. கல்வி, மருத்துவம் போலவே பேருந்து போக்குவரத்தும் ஒரு சேவையாகவே தமிழகத்தில் தொடர்ந்து இயக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ராஜபக்சே குடும்ப கதி.. திமுகவுக்கும் துணைபோகும் விசிகவுக்கும் எச்சரிக்கை.. திருமாவளவனுக்கு பாஜக பதிலடி!

கட்டணம் குறைவு என்ற காரணத்தினால் இன்னும் மக்கள் அதிகமாக அரசு பேருந்துகளையே விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழக அரசு பரிச்சாத்தமாக சென்னை மாநகரில் 1000 பேருந்துகளை தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்து விட்டதாகச் செய்திகள் வருகின்றன. பேருந்துகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து பெரும்பாலும் தனியார் கம்பெனிகளே அதில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. 1971-72 இல் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களில் பெரும்பாலும் அரசு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியதை பெருமையாகப் பறைசாற்றிக் கொண்ட திமுக, இன்று அக்கொள்கைகளிலிருந்து விலகிச் சென்று, அரசு பேருந்துகளையும், அதன் வழித்தடங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விலை பேச முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்.. சங்பரிவார்களுக்கு ஒரு எச்சரிக்கை.. திருமாவளவன் திகுதிகு.!

இதற்கான முன்னோட்டமாக கடந்த மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பும் செய்துள்ளார்கள். துவக்கமாக சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 1000 பேருந்துகளையும், 300 கோடி முதல் 400 கோடி வரை மாநில அரசின் செலவில்  கட்டப்பட்டு வரும் பெரும் பேருந்து நிலையங்களையும் தனியார் வசம் விட்டு விட முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 2021 மே மாதம் ஏழாம் தேதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரையிலும் மத்திய அரசின் கீழ் உள்ள பல விமான நிலையங்களையும், துறைமுகங்களையும் அதானி மற்றும் பிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த பொழுதும்; நிலக்கரி சுரங்கங்களையும், எல்.ஐ.சி பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவு செய்த போதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மோடி மீது கடுமையாகச் சாடினார்கள். 

மோடி  இந்தியாவையே விற்பதாகக் கூக்குரல் எழுப்பினார்கள். ஆனால், இன்று ஸ்டாலின் அரசு ஏழை, எளிய தமிழக மக்களின் பயணங்களுக்கு பெரும்பங்காற்றும் அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமமாகாதா? எனவே, அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மாநில அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும். அன்று; தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியது பெருமையெனில், இன்று; அரசு பேருந்துகள்-பேருந்து நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்வது சிறுமையே!” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் அண்ணன் நான்.. சொத்தில் 50 சதவீத பங்கு கொடுக்கணும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!
 

click me!