25 சீட் இல்லை..! 20 சீட் தான்..! திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை! உண்மை நிலவரம் என்ன?

By Selva KathirFirst Published Mar 6, 2021, 10:10 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு திமுக 25 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் அதனை காங்கிரஸ் 27 தொகுதிகளாக உயர்த்தி கேட்டு வருவதாகவும் முன்னணி ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் செயற்குழுவில் பேசிய கே.எஸ்.அழகிரி, தற்போது காங்கிரசுக்கு திமுக 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் மேலும் 2 தொகுதிகளாக கேட்டு 27 தொகுதிகளில் உடன்பாடு செய்து கொள்ள இயலும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது உண்மை இல்லை என்று கே.எஸ்.அழகிரி தரப்பு திட்டவட்டமாக கூறுகிறது. திமுக ஒதுக்க முன்வரும் தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளதாக மட்டுமே அழகிரி பேசியதாகவும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அவர் பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.

காங்கிரசுடனான முதற்கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையின் போதே திமுக 18 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த உம்மன் சாண்டி உள்ளிட்டோரை  அழைத்துக் கொண்டு புறப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போதும் 18 தொகுதிகளை தாண்டி திமுக வரவில்லை என்கிறார்கள். இதன் பிறகு டெல்லியில் இருந்து சோனியா, ராகுலுக்கு நெருக்கமானவர்கள் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் பேசியதாக சொல்கிறார்கள். இதன் விளைவாக காங்கிரசுக்கு 20 தொகுதிகள் வரை வழங்கத் தயார் என்று திமுக தரப்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது.

இந்த 20 தொகுதிகள் ஒதுக்கத் தயார் என்று திமுக கூறி சுமார் 3 நாட்கள் கடந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதன் பிறகு திமுக – காங்கிரஸ் இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றே சொல்கிறார்கள். காங்கிரஸ் 41 தொகுதிகளை பெற்றே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி உறுதியுடன் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க இயலாது என்பதில் திமுகவும் திட்டவட்டமாக உள்ளது. இந்த சூழலில் திமுக காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக திமுக – காங்கிரஸ் கூட்டணியை விரும்பும் சில பத்திரிகையாளர்கள் பரப்பிவிட்ட வதந்தி என்கிறார்கள்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி தரப்பில் உள்ள சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது, 20 தொகுதிகளை தாண்டி திமுக வர மறுக்கிறது என்பது தான் உண்மை என்கிறார்கள். திமுக தற்போது வரை 20 தொகுதிகளை தாண்டி பேசவில்லை அப்படி இருக்கையில்  காங்கிரசுக்கு 25 தொகுதிகளை தர திமுக முன்வந்துள்ளதாக ஏன் தகவல் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என அவர்கள் கூறுகிறார்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றால் கவுரவமான எண்ணிக்கையில் திமுக தொகுதிகளை தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் திமுகவோ நேராக வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்கிறது.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்நேரடியாக பேச காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கே.எஸ்.அழகிரி அதற்காக நேரம் கேட்ட நிலையில், திமுக தரப்பில் நேரம் வழங்க மறுத்து வருகின்றனர். இதனையும் கே.எஸ்.அழகிரி செயற்குழுவில் கூறி வருத்தப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரசை ஏதோ ஒரு இரண்டாம் தர அரசியல்கட்சி போல் நடத்துகிறது, இதனால் ஸ்டாலினை சந்தித்து பேசினால் சிக்கல் தீரும் என நினைத்து அவரை சந்திக்க நேரம் கேட்டோம், ஆனால் ஸ்டாலின் பிசியாக இருப்பதாக பதில் வந்திருப்பதாக அழகிரி கூறியதாக சொல்கிறார்கள்.

தற்போதைய சூழலில் திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. 20 தொகுதிகள் ஓகே என்றால் உடனே கையெழுத்திட வாருங்கள் என்று கூறி பேச்சுவார்த்தைக்கு திமுக என்ட் கார்டு போட்டு வைத்துள்ளது தான் உண்மையான டெவலப்மென்ட்.

click me!