தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தும்! 20 சீட் தான்..! பாஜகவை அசால்ட் பண்ணிய அதிமுக..! நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Mar 6, 2021, 10:09 AM IST
Highlights

41 தொகுதிகள் என ஆரம்பித்து 31 தொகுதிகளாக குறைத்து பிறகு 25 தொகுதிகளாக இறங்கி வந்தும் பாஜகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று அரசியல் சாணக்கியத்தனத்துடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

41 தொகுதிகள் என ஆரம்பித்து 31 தொகுதிகளாக குறைத்து பிறகு 25 தொகுதிகளாக இறங்கி வந்தும் பாஜகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று அரசியல் சாணக்கியத்தனத்துடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை அள்ளி அள்ளி கொடுத்தது. இதனை மனதில் வைத்துக் கொண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவிடம் தொகுதிகளை கறந்துவிடலாம் என காத்திருந்த கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போதே அதிர்ச்சி வைத்தியம் அளித்து வந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை மூன்று கட்சிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் பாமகவிற்கு ஏற்கனவே 23 தொகுதிகளை கொடுத்து உடன்பாடு ஏற்படுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இதே போல் பாஜகவுடன் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமார் 41 தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்து. ஆனால் அதனை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு 15 தொகுதிகள் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ந்து போன பாஜக தரப்பு உடனடியாக ஓபிஎஸ் வீட்டிற்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டை அதற்கென அமைத்து பேச்சுவார்த்தை குழு கையாள்வதாக ஓபிஎஸ் கைவிரித்துவிட்டார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் டீம், பாஜகவுடன் மிகவும் கறாராக பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழகத்தில் கடந்த தேர்தலில் பாஜக சுமார் 10 தொகுதிகளில் மட்டுமே கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் கன்னியாகுமரி தவிர மற்ற தொகுதிகளில் படு தோல்வியை சந்தித்துள்ளது. சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு வங்கியை கணக்கிட்டால் அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜகவிற்கு மிக சொற்பமான வாக்குகளே கிடைத்துள்ளது என்பன போன்ற தரவுகளை கொடுத்து பாஜக தரப்பை அதிர வைத்துள்ளது எடப்பாடி தரப்பு. எனவே 15 தொகுதிகளை ஒதுக்குகிறோம், அத்தோடு அந்த தொகுதிகளில் பாஜக வெற்றியை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்துகிறோம் என அதிமுக தரப்பு பேசி வந்தது.

ஆனால் 15 தொகுதிகளை ஏற்க மறுத்த பாஜக ஒரு கட்டத்தில் 25 தொகுதிகளை வலியுறுத்தியது. அத்தோடு அதிமுக 25 தொகுதிகளை கொடுக்க முன்வந்துவிட்டதாகவும் ஊடகங்கள் மூலம் செய்தியை பரப்பியது. ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தால் 15 தொகுதிகளில் உறுதியாக இருந்தது அதிமுக. பிறகு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் நடத்திய பேச்சுவார்த்தையின் போது மேலும் 5 தொகுதிகள் கொடுக்க அதிமுக முன்வந்தது. இதனை உயர்த்த கடந்த 2 நாட்களாக பாஜக மிகவும் முயற்சித்து வந்தது. ஆனால் 20 தொகுதிகள் என்றால் பேசலாம் என கூறி பேச்சுவார்த்தைக்கே பாஜக என்ட் கார்டு போட்டுள்ளது.

இதனால் அதிர்ந்த போன பாஜக நிர்வாகிகள் டெல்லி தலையிடம் பேசி 20 தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கூடுதலாக கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவிற்கு மறுபடியும் கொடுக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக மீது அதிருப்தி உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் அடித்து நொறுக்கி கூட்டணிக்கு பாஸ் அதிமுக தான் என்று இந்த தொகுதி உடன்பாடு மூலம் அதிரடியாக தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

click me!