20 ஆண்டுகள் கழித்து திராவிட கட்சியுடன் பாஜக கூட்டணி.. அதிமுகவுடன் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டு!

By Asianet TamilFirst Published Mar 6, 2021, 9:04 AM IST
Highlights

இருபது ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது பாஜக. மேலும் அதிமுகவுடன் முதன் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது பாஜக. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1996-ம் ஆண்டு  கன்னியாகுமரியில் பத்மநாபபுரம் தொகுதியில் முதன் முறையாக வெற்றி பெற்று, பாஜக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தது. 2001-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தது. எனவே, தமிழகத்தில் திமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.
2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்தது. இத்தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மயிலாடுதுறை, காரைக்குடி, மயிலாப்பூர், தளி ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2006, 2011, 2016 என மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணிக்கு முயன்று பார்த்தும், பாஜகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.  எனவே, மூன்று தேர்தல்களிலும் பாஜக தனித்தே போட்டியிட்டது. ஆனால், அக்கட்சியால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக, தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் அக்கூட்டணியில் இடம் பெற்று 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுகவுடன் 1998, 2004, 2019 என மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி கண்ட பாஜக, முதன் முறையாக இப்போதுதான் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டுள்ளது. மேலும், 2001-க்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது பாஜக. 

click me!