பெண்களை இழிவுபடுத்துவதே திமுக-காங்கிரஸ் கலாச்சாரம்.. தாராபுரத்தில் தட்டி தூக்கிய மோடி..

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2021, 2:44 PM IST
Highlights

ஒரு கட்டத்தில் எதிர்க் கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணியை தாக்க தொடங்கிய அவர்,  ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறது. 

திமுக- காங்கிரஸ் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரமாக உள்ளது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். தப்பித் தவறி திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்களை இன்னும் அவர்கள் இழிவுபடுத்துவார்கள் என மோடி எச்சரித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  தமிழர்களுடைய கலாச்சாரத்தில் இந்தியா பெருமை கொள்கிறது, இன்னும் சில நாட்களில் நாம் நம்முடைய புதிய சட்டமன்ற  உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை அடிப்படையாக வைத்து உங்களிடம் வாக்கு கேட்கிறது என்றார். 

ஒரு கட்டத்தில் எதிர்க் கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணியை தாக்க தொடங்கிய அவர்,  ஒருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைக்கிறது.  ஆனால் இன்னொருபுறம் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவர்களுடைய குடும்ப வாரிசு அரசியல் திட்டத்தை முன் வைத்திருக்கிறார்கள்.  திமுக-காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள தலைவருடைய பேச்சு எப்போதும் மற்றவர்களையும், குறிப்பாக பெண்களையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறது.  இப்போது திமுக- காங்கிரஸ் கூட்டணி 2ஜி என்ற ஒரு ஏவுகணையை பெண்களை இழிவுபடுத்துவதற்காகவே ஏவி இருக்கிறது. நான் திமுக மற்றும் காங்கிரசுக்கு சொல்லிக்கொள்கிறேன், உங்கள் தலைவர்களை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். அவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்துகிறார்கள். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரை அவர்கள் இழிவாக பேசி இருக்கிறார்கள். ஒருவேளை திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் பெண்களின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.  லியோனி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார், ஆனால் திமுக தலைமை அதை தடுக்கவில்லை, தமிழக மக்கள் உங்கள் பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இனியும் உங்கள் பேச்சுக்களை அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் சொல்கிறேன்,  திமுக-காங்கிரஸ் கலாச்சாரமே பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரமாக உள்ளது.  திமுகவும்- காங்கிரசும் ஒருபோதும் பெண்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கப் போவதில்லை. 

அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இது மட்டுமல்ல திமுகவின் நட்பு கட்சியான மேற்கு வங்காளத்தில் உள்ள  திரிணாமுல் காங்கிரஸ் சில  நாட்களுக்கு முன்பு ஒரு வயதான பெண்மணியை தாக்கி அவர் உயிரிழந்துள்ளார். திமுகன காங்கிரசின் நட்பும் அவர்களுக்கு கூட்டணியும் பெண்களுக்கு எதிராகவே உள்ளது. ஆனால் எங்களது அனைத்து திட்டங்களும் பெண்களை வலிமைப்படுத்துவதாக, பெண்களின் பெயரிலேயே அமைந்துள்ளது. எல்லா வகையிலும் நாங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.
 

click me!