திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு..! டெல்லியில் பஞ்சாயத்து..!

By Selva KathirFirst Published Feb 22, 2021, 9:47 AM IST
Highlights

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சிக்கலுக்கான பஞ்சயாத்து தற்போது டெல்லியை அடைந்துள்ளது.

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை சிக்கலுக்கான பஞ்சயாத்து தற்போது டெல்லியை அடைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வருகிறது. ஆனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சிறு அளவில்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என்கிறார்கள். அதே சமயம் தொகுதி எண்ணிக்கை காரணமாக திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவே சொல்கிறார்கள். அதற்கு காரணம் காங்கிரஸ் கடந்த முறை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகளை அப்படியே கேட்பது தான் என்கிறார்கள்.

கடந்த முறை காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது மிகப்பெரிய தவறு என்று திமுக கருதி வருகிறது. எனவே கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளில் பாதியைத்தான் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக திமுக தெரிவித்து வருகிறது. மேலும் காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கினால் அது அதிமுக கூட்டணிக்கு சாதகமான தொகுதிகளின் கணக்கில் சேர்ந்துவிடும் என்று வெளிப்படையாகவே காங்கிரஸ் நிர்வாகிகளிடம் திமுக நிர்வாகிகள் கூறி வருவதாக சொல்கிறார்கள். பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்கிறார்கள்.

இதே போல் காங்கிரசும் தேசியக் கட்சியான தங்களுக்கு கடந்த தேர்தலை காட்டிலும் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதை ஏற்கவே முடியாது என்று பிடிவாதம் காட்டி வருகிறது. மதிமுக, விசிக, இடதுசாரிகள் போன்றவைகள் நிதர்சனத்தை உணர்ந்து திமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்வோம் என்று அறிவித்துவிட்டன. எனவே இதே பாணியில் காங்கிரசும் திமுக கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார். மேலும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் சுமார் 200 தொகுதிகளிலாவது களம் இறங்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

எனவே காங்கிரஸ் கட்சிக்கு 21 தொகுதிகள் என்றும் தேர்தல் அறிவித்த சில நாட்களில் இதற்கான உடன்பாட்டில் அந்த கட்சி கையெழுத்திட வேண்டும் என்று திமுக தரப்பு நிபந்தனை விதித்துள்ளதாக கூறுகிறார்கள். இதனால் அதிர்ந்த போனத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பஞ்சாயத்தை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர். திமுக 21 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவிடம் இங்குள்ள நிர்வாகிகள் எடுத்துரைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதனை அடுத்து காங்கிரஸ் மேலிடம் தங்களுடன் தொடர்பில் உள்ள திமுக உயர் மட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டதாக சொல்கிறார்கள். அப்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி சென்னையில் உள்ள நிர்வாகிகளால் மேற்கொள்ளப்படுவதை டெல்லி திமுக பிரபலங்கள் எடுத்துரைத்துள்ளன. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தங்களுக்கு தெரியாது, மேலும் இந்த விஷயத்தில் தங்களால் தலையிட முடியாது என்று காங்கிரசின் டெல்லி திமுக தொடர்புகள் கை விரித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

எனவே தமிழகத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய இறுதிகட்டத்திற்கு காங்கிரஸ் வந்துள்ளதாக கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தில் காங்கிரசுக்கு உள்ள வேறு கூட்டணி வாய்ப்புகள் குறித்த ஆலோசனையும் நடைபெறுவதாக சொல்கிறார்கள். இந்த தகவல் திமுக தலைமையை எட்டியுள்ள நிலையில் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் திமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

click me!