நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா..? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்..!

By Asianet TamilFirst Published Feb 21, 2021, 9:59 PM IST
Highlights

புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும். என்ன நிலை எடுப்போம் என்பதை சட்டப்பேரவையில் தெரிவிப்போம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மையோடு ஆட்சி செய்தது. இந்நிலையில் காங்கிரஸ்  எம்.எல்.ஏ. தனவேலு கடந்தாண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் நாமச்சிவாயம்,  மல்லாடி கிருஷ்ணா ராவ் இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 28 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.


பெரும்பான்மைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு 4,  பாஜகவுக்கு 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டதாக ஆளுநரிடம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதையடுத்து பிப். 22ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு விதித்தார். இந்நிலையில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று வழங்கினார். இதனால், நாராயணசாமிக்கு நெருக்கடி அதிகரித்தது. 
இதற்கிடையே, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வெங்கடேசன் அளித்தார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் பலம் 12ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்துக்குப் பிறகு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நாளை (22ம் தேதி) பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும். என்ன நிலை எடுப்போம் என்பதை சட்டப்பேரவையில் தெரிவிப்போம்” என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

click me!