திமுக – காங்கிரஸ் கூட்டணி..! தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..! 2 நாட்களில் கிளைமேக்ஸ்..!

By Selva KathirFirst Published Feb 23, 2021, 10:48 AM IST
Highlights

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடுபேச்சுவார்த்தை இரண்டு நாட்களில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அது தான் கூட்டணியின் கிளைமேக்ஸ் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடுபேச்சுவார்த்தை இரண்டு நாட்களில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அது தான் கூட்டணியின் கிளைமேக்ஸ் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டே திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உடன் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போதே தமிழகத்தில் காங்கிரசுக்கான தொகுதிகள் எத்தனை என்பது தொடர்பான பேச்சு ஆரம்பமானது. அதன் பிறகு மேலும் ஒரு முறை சென்னை வந்து தினேஷ் குண்டுராவ் தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார். மேலும் காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஸ்டாலினிடம் குண்டுராவ் கூறியிருந்தார்.

அதற்கு முதலில் கள நிலவரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் என்கிற ரீதியில் ஸ்டாலின் குண்டுராவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு திமுக – காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச ஆரம்பித்தனர். சுமார் 3 மாதங்களாக அவ்வப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் பிடிவாதம் காட்டி வருகின்றன. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் 21 தொகுதிகள் தான் ஃபைனல ஆஃபர் இஷ்டம் என்றால் வாருங்கள் என்கிற ரீதியில் திமுக தரப்பில் காங்கிரசிடம் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விவரங்கள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக்கூறப்பட்டது. அப்போது கடந்த முறை 41 தொகுதிகளை வழங்கிய திமுக இந்த முறை 21 தொகுதிகள் என்பதில் உறுதியுடன் உள்ளதாக சோனியா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேசியக் கட்சியான காங்கிரஸ் இவ்வளவு குறைவான தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சோனியா காந்தி அப்போது டென்சனாக கூறியதாக சொல்கிறார்கள். அத்தோடு கடந்த முறை கொடுத்த தொகுதிகளை திமுக வழங்கிவில்லை என்றால் கூட்டணி தேவையில்லை என்கிற ரீதியில் சோனியா பேசியதாகவும் கூறுகிறார்கள்.

இதனை அடுத்தே நாளை அல்லது நாளை மறுநாள் மறுபடியும் அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார். இற்கு முன்னர் ஸ்டாலினை சந்தித்த போதெல்லாம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே குண்டுராவும் காங்கிரசும் கூறி வந்தனர். ஆனால் இந்த முறை கூட்டணி தொடர்பாக அதுவும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச உள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது காங்கிரஸ். இது காங்கிரஸ் கட்சியின் எரிச்சலின் வெளிப்பாடு என்கிறார்கள். அதாவது திமுக தங்களுக்கு கேட்ட தொகுதிகளை தராததன் எரிச்சலின் வெளிப்பாடு.

திமுக எப்போதுமே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை முதலில் அறிவிக்கும். அந்த குழுவினர் தான் கூட்டணி கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவார்கள். ஆனால் அந்த குழுவை திமுக தற்போது வரை அமைக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் வரை காத்திருந்தால் திமுக கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று கருதுகிறது. எனவே முன்கூட்டியே திமுகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டால் தேர்தல் களத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

எனவே தான் திமுக பேச்சுவார்தை குழு அமைக்காமலேயே தொகுதிப் பங்கீடு குறித்து பேச உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால் இதனை திமுக சுத்தமாக ரசிக்கவில்லை என்கிறார்கள். எனவே திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப்பங்கீடு ஓரிரு நாளில் கிளைமேக்ஸை எதிர்கொள்ளும் என்கிறார்கள்.

click me!