
சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடந்துவருகிறது.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தையே இல்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை மட்டும் வெளியிட்டு சரியாக இருக்காது. அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும் எனவும் அதுவரை சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதால், திமுக சார்பில் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் கூறினார்.
அதனடிப்படையில், அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடந்துவருகிறது. திமுக கொறடா சக்கரபாணி, சபாநாயகராக செயல்பட்டு வருகிறார்.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டுள்ளனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான கருணாஸும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.