யோசித்து முடிவெடுங்கள் மக்களே.. திமுக மட்டும் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் தான் நடக்கும்.. எச்சரிக்கும் முருகன்

By vinoth kumarFirst Published Mar 14, 2021, 1:47 PM IST
Highlights

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதில்லை. மாறாக தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே திமுகவினர் கவனம் செலுத்துகின்றனர் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதில்லை. மாறாக தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே திமுகவினர் கவனம் செலுத்துகின்றனர் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் டாக்டர் சரணவன் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது, திமுகவில் மருத்துவ அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், மதுரை மாவட்ட திமுக கோஷ்டி பூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதியை, அக்கட்சி விரும்பி கேட்காமலேயே, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது. இதனால், திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

இதனால், அதிருப்தி அடைந்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- பாஜகவில் தினந்தோறும் பிரபலங்கள் இணைவது எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. தேர்தலுக்காக எங்களது பிரச்சாரம் இன்று முதல் தொடங்குகிறது. திமுக தேர்தல் அறிக்கை பொய்களால் நிறைந்தது. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதில்லை. மாறாக தங்களை வளர்த்துக்கொள்வதிலேயே திமுகவினர் கவனம் செலுத்துகின்றனர். 

விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், நிலத்தை அபகரிக்க தான் செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கட்டபஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு தலைவிரித்து ஆடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், மத்திய அரசு தற்போது செய்து கொண்டிருக்கும் திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. பாஜகவின் நோக்கம் ஊழலற்ற ஆட்சி, அதை நிச்சயம் கொடுப்போம் என்றார். 

பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் பேட்டியளிக்கையில்;- பிரதமர் மோடியின் கொள்கைகளை எடுத்து செல்வதில் நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். சுமார் 3 மாதங்களாக பாஜகவில் சேருவது தொடர்பாக பேச்சு நடத்தி வந்தேன். திமுகவில் எம்எல்ஏவாக இருந்ததால் தான் விருப்பமனு தாக்கல் செய்தேன். திமுகவில் வேட்பாளராக வாய்ப்பு அளித்திருந்தாலும், நான் பாஜகவில் சேர்ந்திருப்பேன் என்றார்.

click me!