தலைவர் ஸ்டாலினா? மகேஷ் பொய்யாமொழியா? போஸ்டர் அடித்து சந்தேகம் கேட்ட தி.மு.க தொண்டர்கள்!

By sathish kFirst Published Oct 12, 2018, 12:25 PM IST
Highlights

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினா அல்லது மகேஷ் பொய்யா மொழியா என்று போஸ்டர் அடித்து தி.மு.க தொண்டர்கள் சந்தேகம் கேட்டிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழி. அவர் மறைவுக்கு பிறகு அவரது மகன் மகேஷ் பொய்யா மொழியை தனது வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார் ஸ்டாலின். கிட்டத்தட்ட மகேஷ் பொய்யா மொழியை தனது மகன் போலவே பாவித்து ஸ்டாலின் தன்னுடன் வைத்துள்ளார். ஸ்டாலின் மகன் உதயநிதியும் அன்பில் மகேசும் மிக நெருங்கிய நண்பர்கள்.
   
திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகியுள்ளார் அன்பில் மகேஷ். கலைஞர் இருந்தவரை அன்பில் மகேஷ் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் மட்டுமே. மேலும் அன்பில் மகேசும் கட்சி நடவடிக்கைகளில் பெரிதாக தலையிடுவது இல்லை. ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் அவருடன் இருந்து அவரை கவனித்துக் கொள்வது மட்டுமே மகேசின் முக்கியமான பணியாக இருந்தது.


   
ஆனால் தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அறிவாலய நடவடிக்கை தொடங்கி நிர்வாகிகள் நியமனம் வரை அன்பில் மகேசிடம் சில பொறுப்புகளை ஸ்டாலினே நேரடியாக கொடுத்தார். அந்த பணியை அன்பில் மகேஷ் தற்போது வரை சிறப்பாகவே செய்து வருவதாக கருதிய ஸ்டாலின் தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவமும் கொடுத்து வருகிறார். 
   
கலைஞர் மறைவை தொடர்ந்து அனைத்து  மாவட்ட தி.மு.கவிலும் நிர்வாகிகள் செயல்பாடு ஆராயப்படுகிறது. கட்சியால் பலன் அடைந்து தற்போது கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியுள்ள தி.மு.கவினரின் பட்டியலை தயார் செய்யும் பணியில் அன்பில் மகேஷ் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையில் சில மாவட்ட நிர்வாகிகள் அன்பில் மகேசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டி அன்பில் மகேசுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு செம டோஸ் கொடுக்கப்படுவதாகவும் தகவல்.


   
இதனால் தான் தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினா அல்லது அன்பில் மகேஷ் பொய்யாமொழியா என்கிற ஒரு சந்தேகத்தை தி.மு.கவினர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். தி.மு.கவில் 50 ஆண்டுகளாக இருப்பவர்களை அழைத்து அன்பில் மகேஷ் கேள்வி கேட்பது எப்படி சரியாக இருக்கும் என்பது தான் அவர்களின் ஆதங்கம். இந்த ஆதங்கம் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் பகிரங்கமாக வெடித்துள்ளது.
   
நெல்லை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பனவடலி வட்டார தி.மு.கவினர் தி.மு.க தலைவர் யார் என்று கேள்வி கேட்டு வெளிப்படையாகவே போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தான் தற்போது தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.

click me!