
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்காததற்கான காரணத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வெளிப்படுத்தியுள்ளார்.
கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொண்டால் நாடாளுமன்ற தேர்தலில் வென்று பிரதமர் ஆவது உறுதி என்று அண்மையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தார். ஆனால் அவருடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் தற்போது வரை ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயங்கி வருகிறது. ராகுல் காந்தியை தி.மு.க பிரதமர் வேட்பாளராக ஏற்குமா என்கிற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின் உயர்மட்டகுழு ஆலோசனைக்கு பிறகே முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்றுள்ள நிலையில் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏன் தி.மு.க ஏற்க கூடாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் புகைச்சலில் உள்ளனர். இதற்கு ஒரு படி மேலே போய் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்பவருடன் தான் கூட்டணி என்று திருநாவுக்கரசர் பேசி வருகிறார். இந்த நிலையில் கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தி.மு.கவிற்கும் – பா.ஜ.கவிற்கு ரகசிய உறவு இருப்பதாக கூறினார்.
ராகுல் காந்தியை பிரதமர்வேட்பாளராக ஏற்காமல் தி.மு.க இழுத்தடிப்பதற்கு காரணம் பா.ஜ.கவுடன் உள்ள தொடர்பு தான் என்றும் தம்பிதுரை தெரிவித்தார். ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் பா.ஜ.கவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்றே ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நழுவிச் செல்வதாகவும் அவர் கூறினார். மேலும் தி.மு.க – பா.ஜ.க இடையிலான ரகசிய உறவு விரைவில் அம்பலமாகும் என்றும் திட்டவட்டமாக தம்பிதுரை தெரிவித்தார்.