மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்வி...! அதிர்ச்சியில் திமுக தலைமை...! போராட்டத்தில் கூட்டணி கட்சி

By Ajmal KhanFirst Published Mar 4, 2022, 11:53 AM IST
Highlights

மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த சம்பவம் கூட்டணி கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை திமுக பெற்றுள்ளது.  21 மாநகராட்சியையும், 132 நகராட்சியையும், 489 பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆம் தேதி வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  பதவியேற்றுக்கொண்டனர். இந்தநிலையில் திமுக தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து முடிவு செய்து அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் 20 மாநகராட்சியின் மேயர் பதவியை திமுக தன் கை வசம் வைத்துள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது.  கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக கும்பகோணம் திமுக அலுவலகத்தில் கதவை பூட்டிவிட்டு ரகசிய ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து திமுக தலைமை அறிவித்தபடி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது .

இந்தநிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரஸ்  கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கி அறிவித்திருந்தது. இந்தநிலையில்  காங்கிரஸ் வேட்பாளருக்கு போட்டியாக திமுக வேட்பாளர் எதிர்த்து போட்டியிட மனு கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சியினர் தங்களது அதிருப்தியை தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் அறையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இதே போல நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 11 வது வார்டில் வெற்றி பெற்ற ராஜாத்தியை பேரூராட்சி தலைவராக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்தநிலையில் திடீரென இன்று காலை பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க  மறைமுக கூட்டம் தொடங்கிய நிலையில் திமுக நகர துணை தலைவர் தனது மனைவி இந்திரா காந்தியை போட்டி வேட்பாளராக அறிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில்  திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் ராஜாத்தி தோல்வி அடைந்தார். திமுகவை எதிர்த்து போட்டியிட்ட இந்திராகாந்தி 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதனால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியிருந்தது. இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வேல்முருகன் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து திமுக சார்பாக  சம்சாத் பேகம் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சம்சாத் பேகம்   வெற்றிபெற்றார்.. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரா் கட்சியினர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் ஆம்பூரில் நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுகவினர் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டதால் தேர்தலானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஏஜாய் அகமது என்பவர் தேர்தலில் முறைகேடு நடப்பந்தாக கூறி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மேஜை மீது இருந்த கோப்புகளை தூக்கி எறிந்தார். இதனால் அந்த பகுதி பதற்றமான நிலை ஏற்பட்டதால் தேர்தலானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   திமுக தனது கூட்டணி கட்சிக்கு குறைவான இடங்களே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களில் திமுகவினரே எதிர்த்து போட்டியிட்டு பதவி இடங்களை பறிக்கும்   உள் குத்து வேலை சம்பவம் திமுக கூட்டணி கட்சியினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

click me!