திமுக, அதிமுகவுக்கு 'அல்வா' கொடுத்த சுயேச்சை வேட்பாளர்.. குமாரபாளையம் நகராட்சியை தட்டி தூக்கிய சுயேச்சை !!

By Raghupati RFirst Published Mar 4, 2022, 11:28 AM IST
Highlights

ஆளுங்கட்சி திமுகவுக்கும்,எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் ‘அல்வா’ கொடுத்து குமாரபாளையம் நகராட்சி தலைவர் ஆகியிருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு, திமுக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 14 இடங்களையும், அதிமுக தனித்துப் போட்டியிட்டு 10 இடங்களையும் பிடித்தது. திமுக, அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சைகளாகக் களமிறங்கி 9 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இத்தேர்தலில், திமுக நகரப் பொறுப்பாளர் எம். செல்வம், அதிமுக நகரச் செயலாளர் ஏ. கே. நாகராஜன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தோல்வியடைந்தனர். இங்கு, தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை. திமுக, அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத இழுபறி நிலையில், சுயேச்சைகளின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடியாது. 

இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலில் நகரமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவியேற்க வரும் கவுன்சிலர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் திமுக நகரச் செயலாளரும், 25-வது வார்டு கவுன்சிலருமான கோ. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தை சுற்றி புதன்கிழமை தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள், போலீசார் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பதவி ஏற்பு விழா நகராட்சி ஆணையாளர் சசிகலா தலைமையில் நகர்மன்ற கூட்ட அரங்கில் தொடங்கியது. அப்போது, முதலில் வந்த திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 7 பேர் பதவி ஏற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் தனியே பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தனி வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிமுக, திமுக மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்பட 18 பேர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்துச் சென்ற இவர்கள் மீண்டும் தனி வாகனத்தில் ஏறி நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர், நீண்ட நேரம் கழித்து முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் கே. எஸ். பாலசுப்பிரமணி உட்பட 4 அதிமுக உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். சுயேச்சைகள் 9 பேர் வெற்றி பெற்றதால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயன்று வந்தனர்.

இதுகுறித்து இரு கட்சியினரிடமும் விசாரித்தோம். அப்போது, 'குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வாக, அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி இருந்துவருகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் தொகுதி நிலைமையே தங்கமணிக்கும் ஏற்பட்டு இருக்கிறது.ஏறத்தாழ அதிமுக குமாரபாளையம் தொகுதியில் செல்வாக்கை இழந்துவிட்டது என்றே கூறலாம்.

குமாரபாளையத்தில் ஜெயித்த 9 கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற இருதரப்பும் முட்டிமோதின. ஆனால், கடைசியில் விஜய கண்ணன் என்பவர் உள்ளே புகுந்து திமுக,அதிமுக இரண்டு கட்சிக்கும் அல்வா கொடுத்து விட்டார். இதனால், தங்கமணியும், தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தியும் ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொண்டதாக சொல்லப்பட்டது. 

அதாவது, விஜய்கண்ணன் அழைத்துப்போன அ.தி.மு.க கவுன்சிலர்கள் மூன்று பேரையும் அழைத்து வருவதோடு, அவர்களையும் சேர்த்து மொத்தமுள்ள 10 அ.தி.மு.க கவுன்சிலர்களை தி.மு.க-வுக்கு ஆதரவு தர வைக்கிறேன் என்று தங்கமணி உத்தரவாதம் கொடுத்தாராம். அதற்கு கைம்மாறாக, அ.தி.மு.க-வுக்கு துணைத் தலைவர் பதவியைத் தந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்றும் கூறுகின்றனர்.

மறைமுக தேர்தல் மூலம் இன்று சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவதால், இன்று காலையில் இருந்தே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திமுகவால் அறிவிக்கப்பட்ட சத்திய சீலன் வெற்றிபெறுவாரா அல்லது சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணன் வெற்றி பெறுவாரா ? என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடந்தது. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணன் 18 வாக்குகள் பெற்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தொகுதியிலேயே, அதுமட்டுமில்லாமல் ஆளுங்கட்சி திமுகவுக்கும் அல்வா கொடுத்து ‘நகர்மன்ற தலைவர்’ ஆக பதவியேற்று இருக்கிறார். 

click me!