துரைமுருகன் வீடு திரும்பிய நேரத்தில் இப்படியா?... ஸ்டாலின், உதயநிதிக்கு ஒரே நேரத்தில் கிடைத்த அதிர்ச்சி செய்தி

By Kanimozhi PannerselvamFirst Published Apr 14, 2021, 2:39 PM IST
Highlights

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியுள்ள நிலையில், மற்றொரு திமுக வேட்பாளர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில்  தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றின் 2வது அலைக்கு தமிழகமும் தப்பவில்லை. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம், பொதுக்கூட்டம் என அதிக அளவில் குவிந்த மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததும் தான் கொரோனா தொற்று தீவிரமாய் பரவ முக்கிய காரணமாக அமைந்தது. 

தேர்தலுக்கு முன்பே திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக என கட்சி வேறுபாடின்றி பல வேட்பாளர்களும் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் வேட்பாளர்கள் இல்லாமலேயே வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் இந்த தேர்தலில் தான் அரங்கேறியது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி இரவு 7 மணியோடு நிறைவடைந்த நிலையில், அதன் பிறகாவது வேட்பாளர்களை படாய்படுத்தும் கொரோனாவின் தாக்கம் குறையுமா? என அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்து வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 11ம் தேதி மட்டும்  ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் கணவர் சுந்தர் சி,  அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், நெடுங்காடு தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து என ஒரே நாளில் 4 வேட்பாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது. 

மறுநாளே  கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவருமான ஸ்ரீதர் வாண்டையார், ஆத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு இன்று வீடு திரும்பியுள்ள நிலையில், மற்றொரு திமுக வேட்பாளர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

click me!