தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க.வுக்கு 7 எம்.பிக்கள் உறுதி! உளவுத்துறையின் அதிரடி அறிக்கை!

By vinoth kumarFirst Published Aug 28, 2018, 11:26 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன்  கூட்டணி வைத்தால் தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவிற்கு 7 எம்.பிக்கள் உறுதி என்று மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் இரண்டு கட்சிகளின் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன்  கூட்டணி வைத்தால் தமிழகத்தில் இருந்து பா.ஜ.கவிற்கு 7 எம்.பிக்கள் உறுதி என்று மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் இரண்டு கட்சிகளின் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தி.மு.க – பா.ஜ.க இடையிலான உறவு மேம்பட்டு வருகிறது. கலைஞர் மறைவுக்கு மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது. தமிழக பா.ஜ.க அலுவலகத்திற்கு நேரில் சென்று வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது போன்றவை இரு கட்சிகளுக்கு இடையிலான கசப்பான அனுபவங்களை மறக்க வைத்தது.

இதனை தொடர்ந்து கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க அமித் ஷாவுக்கு தொலைபேசி மூலம் ஸ்டாலின் விடுத்த அழைப்பு பா.ஜ.க–தி.மு.க இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தற்போதைய நிலையில் கலைஞர் நினைவேந்தலில் அமித் ஷா கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், விரைவில் தமிழகம் வரும் அவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து துக்கம் விசாரிப்பார் என்று சொல்லப்படுகிறது. கடந்த மாதம் வரை எலியும் பூனையுமாக இருந்த இரண்டு கட்சிகள் தற்போது நட்புறவு பாராட்டுவதன் பின்னணியில் மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக்கை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

 அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கணக்கை சரி செய்ய உளவுத்துறை மூலம் பா.ஜ.க ஒரு சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயின் படி தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.கவிற்கு சாதகமான சூழல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தால் 40 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை இரண்டு கட்சிகளும் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை பா.ஜ.க மேலிடத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. அதிலும் தி.மு.க கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த தகவல் தமிழக பா.ஜ.க தலைவர்களை சென்றடைந்த பிறகே தி.மு.கவுடனான உறவு மேம்பட ஆரம்பித்துள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை கூறி தி.மு.கவுடனான கூட்டணி குறித்து மேலிடம் விசாரித்த போது தான் ஸ்டாலின் பா.ஜ.கவின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது உளவுத்துறையின் அறிக்கை குறித்து தமிழிசை ஸ்டாலினிடம் எடுத்துக்கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமான மனநிலை மக்கள் மத்தியில் இருப்பதாக உளவுத்துறை கூறியதை நம்பியே இருகட்சி தலைவர்களும் நட்பு பாராட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களின் கட்சிக்காரர்களே பேச ஆரம்பித்துள்ளனர்.

click me!