
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் எண்ணத்தில் திமுக உள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் திமுக தொகுதிகளை ஒதுக்கும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 20 -25 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. எனவே அந்த அளவுக்குக் குறையக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக உள்ளது. இந்நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டப்பேரவை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை இன்று நடத்த உள்ளனர்.
இத்தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு குறையாமல் திமுகவிடம் கேட்டுப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் குழுவினர் திமுக சார்பில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குழுவுடன் பேச்சுவார்த்தையை அறிவாலயத்தில் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.