எம்.ஜி.ஆர். வென்ற தொகுதியில் களமிறங்கும் கமல்... ஆலந்தூரை அதகளப்படுத்தும் மக்கள் நீதி மய்யம்..!

By Asianet TamilFirst Published Feb 24, 2021, 9:47 PM IST
Highlights

எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற பழைய பரங்கிமலை தொகுதியான இன்றைய ஆலந்தூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 1.45 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அந்தத் தொகுதிக்குட்பட்ட மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றதால், இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமா? உங்கள் கருத்து என்ன என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலந்தூர் தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கணிசமாக வாக்குகளைப் பெற்றது. ஆலந்தூரில் 22,379 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. மேலும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தபோது 1967, 1971 ஆகிய தேர்தல்களில் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றைய பரங்கிமலை தொகுதிதான் இன்றைய ஆலந்தூர் தொகுதியாக உள்ளது.
இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது எம்.ஜி.ஆரை வைத்து பல இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.  நான் எம்.ஜி.ஆரின் நீட்சி என்றும் கமல் பேசினார். எனவே, எம்.ஜி.ஆர். செண்டிமென்டை மையப்படுத்தியும் மக்கள் நீதி மய்யத்துக்கு அதிக வாக்குகள் கிடைத்த ஆலந்தூரில் கமல்ஹாசன் போட்டியிடுவது சரியாக இருக்கும் என்று அக்கட்சியினர் திட்டமிடலில் ஈடுபட்டுள்ளனர்.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியோ தனித்து எப்படி போட்டியிட்டாலும் கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.  
 

click me!