திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் …. மு.க.ஸ்டாலின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Feb 20, 2019, 9:00 PM IST
Highlights

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இயைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சிடககு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லிக்கு சென்றனர். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டில் ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று பிற்பகல் சென்னை வந்தார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். 

சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் வேணுகோபால், முகுல்வாஸ்னிக் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.

தொடர்ந்து மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கு உரிய தொகுதி பங்கீடு குறித்து பேசி வருவதாகவும் அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

click me!