ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500..! திமுக கூட்டணி தீர்மானம்

By karthikeyan VFirst Published May 31, 2020, 8:19 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வருவதாயில்லை. தேசியளவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

கொரோனாவை தடுக்க நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. ஊரடங்கு முடிவதற்குள்ளாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேவேளையில், ஏற்கனவே 2 மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க முடியாது.  அதனால் ஊரடங்கில் நிறைய தளர்வுகள் செய்யப்பட்டு, மக்கள் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

கொரோனாவுடன் வாழப்பழக வேண்டும் என்று மக்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுவிட்டது. கொரோனா ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்த நிலையில், பொருளாதார மீட்புக்காக ஊக்க நிதியாக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. 

ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை போக்கவும் மத்திய, மாநில அரசுகள் முடிந்தவரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசு, ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.1000 வீதம் நிவாரண நிதி வழங்கியது. மத்திய அரசு சார்பில் ஜன் தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.500 செலுத்தப்படுகிறது. 

இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்களுக்கு நேரடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சில பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் அதற்கான நிதி ஆதாரம் இல்லை என்ற நிதர்சனத்தை அவர்கள் உணர்ந்திருந்தாலும், அதை சொல்ல மறுக்கின்றனர். இந்நிலையில், திமுக தோழமை கட்சிகளுடனான ஆலோசனையை இன்று நடத்தியது. 

காணொலி மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள், விசிக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ7500 மற்றும் மாநில அரசு சார்பில் ரூ.5000 என மொத்தம் ரூ.12,500 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

click me!