கொரோனாவை தடுக்க முக்கியமான நேரத்தில் தமிழக அரசின் தரமான நடவடிக்கை..!

By karthikeyan VFirst Published May 31, 2020, 4:39 PM IST
Highlights

தமிழக அரசு சார்பில் தென்கொரியாவில் ஆர்டர் செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்துவிட்டன. 
 

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. தினமும் சீரான வேகத்தில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டாலும், தமிழகத்தின் பாதிப்பை பொறுத்தமட்டில் இதுவே போதாது என்ற நிலை தான் உள்ளது. 

இதுவரை தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, அதிகபட்சமாக 72 பரிசோதனை மையங்கள் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டு அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிய வேண்டும். 

அந்தவகையில், பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. பரிசோதனை மையங்களை அதிகரிப்பது, பரிசோதனை கருவிகளை ஆர்டர் செய்து வாங்குவது ஆகிய நடவடிக்கைகளை தமிழக அரசு முழுவீச்சில் எடுத்துவருகிறது. ரேபிட் டெஸ்ட் கிட்கள் விரைவில் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கருவிகள் தரமில்லாததால் திருப்பியனுப்பப்பட்டன. 

எனவே பிசிஆர் கருவிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டில் தினமும் சராசரியாக 12 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனை அதிகரிக்கப்படாதபோதும், தினமும் பாதிப்பு மட்டும் அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 938 பேருக்கு தொற்று உறுதியானது. 

சென்னையில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. எனவே பரிசோதனைகளை 12 ஆயிரத்திலிருந்து தினமும் 18 ஆயிரம் என்கிற அளவுக்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசிடம் கைவசம் இருக்கும் பிசிஆர் கருவிகள் முடிவதற்கு முன்பாகவே, தமிழக அரசு சார்பில் தென்கொரிய நிறுவனத்திடம், பிசிஆர் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டன. 

அந்தவகையில், தமிழக அரசு ஆர்டர் செய்த ஒன்றரை லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகத்திற்கு வந்துள்ளன. இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ஒன்றரை லட்சம் கருவிகள் வந்திருப்பதால் இனி பரிசோதனைகளை தினமும் 18 ஆயிரம் என்கிற அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்து. அதை தமிழக அரசு செய்தாக வேண்டும். அப்போதுதான், கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும். 

பரிசோதனைகளை அதிகரிக்கும் வண்ணம் பரிசோதனை மையங்களை அதிகரித்துவரும் தமிழக அரசு, பிசிஆர் கருவிகளுக்கான ஆர்டர்களையும் சரியான நேரத்தில் செய்து, அந்த கருவிகளை சரியான நேரத்தில் பெற்றுள்ளது. 
 

click me!