திமுக- அதிமுக புதுக் கூட்டணி… பரம எதிரிகள் ஒன்று சேர்ந்ததால் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Oct 17, 2018, 7:29 AM IST
Highlights

அறந்தாங்கியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். அமமுகவை தோற்கடிக்க இந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்க 11 இயக்குனர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 16 பேர் போட்டியிட்டனர். காலை 7 முதல் தேர்தல் தொடங்கியதில் பாதுகாப்பு கருதி அங்கே அங்கே போலீசார் பேரிகாடு அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுகவுக்கும், அமமுகவுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினரும், அதிமுகவினரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் திமுக- அதிமுக இரு கட்சியினரும் இயக்குநர் பதவிகளை  பிரித்து போட்டியிடுவது என முடிவு செய்து களத்தில் குதித்தனர்.

தேர்தல் நடந்ததையொட்டி பட்டுகோட்டை சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. வாக்குசாவடி அருகே தேர்தல் வேட்பாளர்கள் வாக்கு செலுத்த வந்தவர்களிடம் அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

தேர்தலையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அறந்தாங்கி நகர கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை வாக்கு எண்ணும் பணி நடக்கிறது.

எலியும், பூனையுமாக இருந்து வரும்  திமுக – அதிமுக பதவிக்காக ஒன்று சேர்ந்து போட்டியிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

click me!