திருநாவுக்கரசர் – திருமாவளவன் திடீர் சந்திப்பு !! தனி ரூட் போடும் காங்கிரஸ்… திமுக கூட்டணி உடையுமா ?

By Selvanayagam PFirst Published Oct 16, 2018, 9:04 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி அமமுக, காங்கிரஸ் மக்கள் நீதி மய்யம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளனும் திடீரென சந்தித்துப் பேசினர்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தையைத் தொடங்கிவிட்டன.

அதற்கு முன்பாக மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் குறி வைத்து தீவிர பிரச்சாரத்தில் இரு கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  என பெரும் கூட்டணி தற்போது உள்ளது. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கப் போவதாக திமுக சார்பில் கறாராக சொல்லிவிட்டதாக தெரிகிறது.

இதற்கு ஒப்புக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதல் படியாக, காங்கிரஸ், அமமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியை உருவாக்க தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ராகுலின் ஆசி உள்ளது என்றும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் அவர் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டணி என்பதற்கு கமல் ஓகே சொல்லிவிட்ட நிலையில் தற்போது எல்லாம் கூடி வருவதாக சந்தோஷத்தில் மிதக்கிறார் திருநாவுக்கரசர் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்நிலையில் இன்று திருநாவுக்கரசரும், திருமாவளவனும் திடீரென சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!