காவி வேட்டி கட்டி மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் !! நாடகம் என பாஜக பாய்ச்சல் !!

By Selvanayagam PFirst Published Oct 16, 2018, 8:18 PM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் முன், ராகுல், காவி உடை அணிந்து, நெற்றியில் குங்கும பொட்டுடன், பீதாம்பரா சக்தி பீடத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். ஆனால் அவர் நாடகமாடுவதாக பாஜக புகார் வாசித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், அடுத்த மாதம், 28ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வரும், காங்கிரஸ்., தலைவர் ராகுல், அங்குள்ள முக்கிய ஹிந்து கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்; அங்கு நடக்கும் சிறப்பு வழிபாடுகளிலும் பங்கேற்கிறார். 

நேற்று ததியா மாவட்டத்திற்கு சென்ற அவர், அங்கு நடக்கவிருந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்கு முன், அங்குள்ள, பீதாம்பரா சக்தி பீடத்திற்கு சென்று வழிபட்டார். காவி வேட்டி, வெள்ளை நிற குர்தா அணிந்து, நெற்றியில் குங்கும பொட்டுடன் காட்சியளித்த ராகுல், கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் பங்கேற்றார்.

மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில், ஹிந்துக்களின் ஓட்டுகளை கவர்வதற்காகவே, அவர், திடீரென ஆன்மிக கோலத்தில் வலம் வருவதாக, பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ்  செய்தி தொடர்பாளர், பங்கஜ் சதுர்வேதி ,  காங்கிரஸ்., தலைவர் ராகுல், சக்தி பீடத்தில் வழிபடுவது, புதிய விஷயமல்ல. அவரது குடும்ப வழக்கப்படியே, இந்த வழிபாடு நடந்துள்ளது. ராகுலின் பாட்டி இந்திரா, இந்த சக்தி பீடத்தில் வழிபட்டுள்ளார். 



ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான, ராஜிவும், இங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் தான், ராகுலும், இங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று உள்ளார். இதில், அரசியல் ஏதும் கிடையாது என்று அவர் தெரிவித்தார்.

click me!